Wednesday 18 April 2018

ராம மடமென்னும்...

ராம மடம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, "கோய்ந்தா கோய்ந்தா" தான். 'சின்ன தாத்தா' என எல்லோராலும் அழைக்கப்படும் கோவிந்தசாமி தாத்தா தான், பஜனை பாடுவார். புரியாத மொழியில் 'பாண்டுரங்கா விட்டேளா பண்டேரிநாதா விட்டேளா' என தொடங்கி ஏதேதோ பாடிக்கொண்டிருப்பார். 'ஹரிகர ராம சங்கீர்த்தனம்' என்று சொன்னதும், கோய்ந்தா கோய்ந்தா என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும். அந்த வரி அவரது வாயிலிருந்து விடுபடுவதற்காக காத்திருப்போம், அவர் அதை சொன்னதும் 'கோய்ந்தா கோய்ந்தா' என கட்டிடம் அதிருமளவிற்கு கத்துவோம். அப்படி கத்துவதில் அதீத ஆர்வமிருக்க காரணம், அதை நாங்கள், கோவிந்தசாமி தாத்தாவை 'கோய்ந்தா' என ஒருமையில் விழித்து கிண்டலடிக்கும் வாய்ப்பாகக் கருதினோம். அதிலொரு அளவில்லா ஆனந்தத்தையும் அடைந்தோம்.

எங்கள் ஊரின் பழைய ராம மடம், பெரிய ஓட்டு கட்டிடமாக இருக்கும். கட்டிடத்தின் முதல்பாதி, 50~60 பேர் அமரும்படியான பெரிய கூடம், இரண்டாம் பாதியின் மையமாக மடத்தின் கருவறையும், அந்த கருவறையை சுற்றிவர கட்டிடத்துக்குள்ளேயே சுற்றுப்பாதையையும் கொண்டதாக இருக்கும். சுற்றுப்பாதை, நால்வர் சேர்ந்து நடக்கும்படியான அகலமானதாக இருக்கும். அந்த சுற்றுப்பாதை, விழாக்காலங்களில் சமையலறையாக மாற்றம் பெறும். கல்லை அடுக்கி அடுப்பை அமைத்து, பொங்கல் புளியோதரை வடை எல்லாம் சமைக்கப்படும். கூடத்தின் இடதுபுறமாக, மரத்தால் செய்யப்பட்ட கருடவாகனம் ஒன்றிருக்கும். இறக்கை பொருத்தப்பட்ட, மனித உருவம்(!) கொண்ட கருடர் அவர், சிறுவயதில் அவரைத் தான் ராமன் என்று நினைத்திருந்தேன். முறுக்குமீசை வைக்கப்பட்டு, ஓட்டப்பந்தயவீரர் ஓடுவதற்கு ஆயத்த நிலையில் இருப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பார், கருடர். விழாக்காலங்களில் ராமனது புகைப்படத்தை இதன் மேல் வைத்து ஊர்வலம் நடத்த, இந்த கருடவாகனம் பயன்படுத்தப்படும்.
கூடத்தின் வலதுபுறம், சுவற்றில் ஆஞ்சநேயரின் உருவம் வரையப்பட்டிருக்கும். மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் அந்த ஆஞ்சநேயருக்கு, விழாக்காலங்களில் வடைமாலை அணிவிப்பார்கள்.

ராம மடத்து திடலில் நடக்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி, மங்கலான படிமங்களாக மனதின் அடுக்குகளில் படிந்திருக்கிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு தந்துவிட முடியாத கலை பொக்கிஷம், பொம்மலாட்டம். எனக்கும் பொம்மலாட்டம் சார்ந்த அனுபவங்கள், முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. தார்பாய் கொண்டு அமைக்கப்பெற்ற கொட்டகையில், ஒருவர்பின் ஒருவராக பயணச்சீட்டு பெற்று செல்லும் வகையில் நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நடந்தேறும் கதை எது பற்றியது, திரையில் பொம்மைகள் எப்படி அசைவு பெறுகின்றன என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, தூக்கம் வந்துவிடும். அம்மா மடியில் அயர்ந்துறங்கி எழுந்தால், 'காப்பி குடிக்கிறியாப்பா' என்று கேட்டுக்கொண்டே அடுப்பங்கறை செல்வார் அம்மா. "எப்பம்மா தூங்கினேன், எத்தனை மணிக்கும்மா முடிஞ்சிது?" என்று கேட்டால், "ஒனக்கு டிக்கெட் எடுத்ததே தெண்டம், நீ தான் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே!" என்பாள்.  சிலமுறை, முருங்கைக்காய் கீரை எனக் கேட்டு, பாவாடை சட்டையணிந்த பெண் எங்கள் வீட்டிற்கு வருவாள், யாரென்று கேட்டால், "இவொ தான்டா பொம்மலாட்டம் நடத்துறது" என்று அம்மாவிடமிருந்து பதில் வரும். இவ்வளவு தான், பொம்மலாட்டம் பற்றி, நினைவடுக்குகளில் தொக்கி நிற்பவை.

பொம்மலாட்டங்களை எல்லாம் பெட்டிகட்டி அனுப்பியது, திரைப்படங்கள். ஃபிலிம்சுருள்களைக் கொண்டு திரையிடப்படும் திரைப்படங்கள் அவை. இவ்வகையான திரையிடுதலில், கூடுதல் வசதி என்னவென்றால் பின்புறத்திலிருந்தும் திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம். திரையின் பின்னாலிருந்து பார்க்கும்போது, இடது-வலது பக்கமாற்றம் ஏற்படும். அதாவது, தமிழ்நாட்டு மரபு சேலைகட்டு, சேட்டுவீட்டு சேலைகட்டாக மாற்றம் பெறும்.
ஒரு படத்தை திரையின் பின்புறத்திலிருந்து பார்த்து விட்டு, அடுத்தமுறை முன்புறத்திலிருந்து பார்க்க நேர்ந்தால், அதே படம் வேறோரு திரைப்படமாகத் தோன்றும். ஃபிலிம்சுருள்களிலிருந்து சில ஃபிலிம்கள் உதிர்ந்து, மண்தரையில் புதைந்து கிடக்கும், அடுத்தநாள் அதைப் பொருக்க அணிவகுப்புகள் நடத்துவோம். சேகரித்த ஃபிலிம்களைக் கொண்டு, தாத்தாவின் வேட்டியை திரையாக்கி, வெயிலொளியை சிறைபிடித்து பூதக்கண்ணாடி வழியாக பாய்த்து, மாட்டுக்கொட்டகையில் திரையிடுவோம். கிடைத்த ஃபிலிம்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்படும். எல்லா திரைப்படத்திலும் கடைசியாக சண்டைக்காட்சியின் ஃபிலிமை காண்பித்து, வணக்கம் என்கிற ஃபிலிமோடு முடித்ததாக நினைவிருக்கிறது.

இப்போது,
✴"ராமன் என்ன, தமிழர்களின் கடவுளா?",
✴"இராமாயணம் என்னும் கதையில் வரும் கதாப்பாத்திரத்தை, இவர்கள் ஏன் கடவுளாக வழிபடுகிறார்கள்?",
✴"அப்படியானாலும், ராவண பூமியில், ராமன் எதற்காக வழிபடப்பட்டார்?",
✴"சிவனுக்கு பெரிய பெரிய கோவில்கள் இருக்கிற ஊரில், ராமன் சிறிய மடத்தில் முடக்கிவைக்கப்பட்டதன் பின்னாலிருக்கும், எமது முன்னோரின் விழிப்புணர்வு எப்படிப்பட்டது?"
போன்ற எண்ண அலைகள் வந்து மோதுகிறது.

இதன் நீட்சியாக, இந்த இதம்தரும் நினைவுகளை ஏந்தி நிற்கும் வகையில், ராம மடம் ரம்மிய இடமாகிறது.