Thursday, 28 June 2018

தணலாக வேகுறேன்டி


"கருப்பம்பொலத்துல பத்திரிக்கை கொடுக்க போன எடத்துல, உன்ன ஒரு பொண்ணு விசாரிச்சுது அத்தான்" வீட்டுக்குள் நுழைந்த பொழிலனிடம், பாண்டியன் வியந்து கூறினான்.
"யாரு அத்தான்? பேரு என்ன?" என்றான் பொழிலன்.
"பேரென்னமோ சொல்லுச்சே... ம்ம்ம்... பேரு... மறந்துருச்சு அத்தான்!" என சிந்திப்பிலிருந்து விடுபடாதவனாய் பதிலளித்தான், பாண்டியன். மீண்டும் எதோ உடனடியாக நினைவுக்கு எட்டிய விதமாய் "வாத்தியார் வீட்டுப் பொண்ணுத்தான்! உன்னோட, நாடிமுத்து பள்ளிக்கூடத்துல படிச்சுதாமே" என்றான்.
"வாத்தியார் வீட்டுப் பொண்ணா? அதுசரி. நீ என் சொந்தக்காரன்னு, அதுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டான் பொழிலன், வியப்பு விலகாதவனாக.
"அதான... பத்திரிக்கையில பேரு வெலசாமெல்லாம் எழுதிருந்தில்ல! உன் கையெழுத்த வைச்சே கண்டுபிடிச்சுருச்சு அத்தான். ஊர் பேர பாத்துட்டு 'பொழிலன் வீட்டுப் பக்கமா?'னு கேட்டுச்சு. ஆமான்னதும், என்ன மொற? என்னயேதுன்னு விசாரிச்சுது. பத்திரிக்கைல இருந்த கையெழுத்த வச்சுதான் கேட்டதாவும், சொல்லுச்சு. கையெழுத்தை வச்சே கண்டுபுடிக்குதுன்னா, அஞ்சாவதுலயே ஆரம்பிச்சிட்டியாத்தான், உன் வேலைய? அப்பவே லவ் லெட்டர் கொடுத்துட்டியா?" என குறும்பு சிரிப்போடு கேட்டான், பாண்டியன்.
சிறிய வெட்கத்துடன், "அதெல்லாம் ஒண்ணுல்லத்தான், நீ வேற. கூட படிச்சதுக்கு, என் கையெழுத்து எப்படிருக்கும்னு தெரியாதா? என் எழுத்து வேற குண்டுகுண்டா தனியா தெரியுமுல்ல. அதனால ஞாபகம் இருந்துருக்கும்." என்று சமாளித்தான், பொழிலன்.

கையெழுத்தை வைத்தே என்னை நினைவில் நிறுத்தியிருப்பவள், நிறைமதியைத் தவிர வேறு எவளாக இருக்க முடியும்? கூடுதல் தகவலாக, கருப்பம்புலம் - ஆசிரியரின் மகள் என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கிறது. பெயர் வேறு வேண்டுமா? நிறைமதியே தான்.
"என் நிம்மதியைக் கெடுத்த நிறைமதியே!
நமது நெருக்கம் வளர்பிறையாவதால்
எனது உறக்கம் தேய்பிறையாகிறதடி...
" என்று அவளது நினைவில் எப்போதோ எழுதிய கவிதையோடு அவளது நினைவும், பொழிலனின் நினைவில் ஒலிபரப்பானது.
நிறைமதி, ஏழாம் வகுப்பு வரை பொழிலனோடு படித்து, பின்னர் 'பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு' மாறிப் போனவள்.
ள்ளிநாட்களில், உயரமாக இருப்பதால் நிறைமதி கடைசிப் பலகையில் அமர்ந்திருப்பாள், அவளைக் காண ஏதுவான, பக்கவாட்டில் போடப்பட்ட பலகையில் பொழிலன் அமருவது வழக்கம். நான்காம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை வகுப்பறைகள் மாறினாலும் இந்த வழக்கம் மாறுவது இல்லை. அவளது முகத்தைப் பார்த்தால், பொழிலனின் மனதில் ஒரு பேரானந்தம் பரவும். அவ்வளவு தான். அந்த உணர்வை நிறைமதியின் முகம் தவிர வேறெந்த முகமும் ஏற்படுத்தாதது, அவளின் மீதான ஈர்ப்பை குறையவிடாமல் காத்துவந்தது. பள்ளியில் வகுப்பு நடைபெறுகையில், சீரான கால இடைவெளியில் நிறைமதியின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொள்வான். சிலமுறை, இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும். பார்வைகள் சந்திக்கிற வேளைகளில், இவனாக விலக்கிக் கொள்ளாதவரை, அவளது அரைவட்ட பிறை போன்ற விழிகள் இவனை விழுங்க முற்படுவது போல பார்த்துக்கொண்டே தான் இருக்கும்.
அந்த பருவத்தில், எல்லா தேர்வுகளிலும், பொழிலனின் அருகே நிறைமதி அமர்ந்து கொள்வாள். பொழிலன் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதால், தேர்வெழுதும் போது அவனை தேர்வுத்தாளின் பதில்களை காட்டும்படி கேட்பாள். இவனும் தன்னால் இயன்ற வரை, ஆசிரியர் காணாத நேரங்களில் பதில்களை, அவளுக்கு தெரியும்படி காட்டி உதவுவான். இப்படியாக தேர்வெழுதி மூன்றாவது நான்காவது இடங்களை பெறும்வகையில், நிறைமதி மதிப்பெண்கள் எடுப்பாள். தேர்ச்சி பெறுவதையும் தாண்டி, தன்னை உயர் மதிப்பெண்களை குவித்துவிட உதவிய பொழிலனின் கையெழுத்து, எப்படி மறக்கும் நிறைமதிக்கு? 

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், பொழிலன் பத்தாம் வகுப்பு முடித்துக் கோடை விடுமுறையில் இருந்த போது, உள்ளூர் திருவிழாவின் பொருட்டு உறவினர் வீடுகளுக்கு கொடுக்கப்படும் இனிப்புவகைகளை, கருப்பம்புலம் அத்தைவீட்டிற்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வர சொன்னார், அவனது தந்தை. பொழிலன் மறுத்ததும், தான் கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவதாகவும், அவருக்கு பதிலாக புகையிலை காய போடுவதில் உதவி செய்யவும், கேட்டுக் கொண்டார். புகையிலை காய போடுவதும், சிறிதுநேரம் காய்ந்த பின்னர் எடுத்து அடுக்குவதும், எளிதான வேலை அல்ல. அதை செய்தால், இடுப்பு ஒடிந்துவிடுவது போன்ற வலி ஏற்படும், அத்தோடில்லாமல் புகையிலை தண்டின் பசை போன்ற பாய்மம் கையில் ஒட்டிக்கொண்டுவிட்டு சோப்பு போட்டு கழுவினாலும் விடுபடாது. அதன் கசப்புத்தன்மை, சாப்பிடும்போது திகட்டுகிற உணர்வை ஏற்படுத்தும். சாப்பாட்டோடு கலந்த கையிலிருக்கும் அழுக்கு, செரிமானத்தை கெடுக்கும், பசி உணர்வை தடை செய்யும். புகையிலை காய போடும் போது அதன் நெடி, சுவாசத்தில் கலந்து மெல்லியதான மயக்க உணர்வு ஏற்படுத்தும். இவ்வளவு கடினங்கள் நிறைந்த வேலைக்கு மாற்றாக, வேறெந்த வேலை கொடுத்தாலும் பொழிலன் செய்துவிடுவான் என்பது தெரிந்தே தான், அவனது தந்தை இப்படியான இரு தேர்வுகளை முன்வைத்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அத்தைவீடு சென்றுவர பொழிலன் அணியமானான்.

அந்த மாலைப்பொழுதில் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு, திருவிழா இனிப்புகளை அத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு வரும் வழியில், சாலையோரமிருந்த புகையிலை திடலின் உள்ளேயிருந்த மோட்டார் செட் நோக்கி நளினத்தோடு ஒரு உருவம் நகர்ந்ததை கவனித்தான். ஆண்களின் பனியனோடு பாவாடையை இணைத்தது போன்ற ஒரு உள்ளாடையை 'ஜிம்மிஸ்' என்பார்கள், அந்த ஜிம்மிஸ் அணிந்த நங்கையொருவள் தனது கொண்டையை இறுக்கி முடிந்துகொண்டே, குளிப்பதற்காக நடந்து செல்வதை உற்று கவனித்தபடி, அவன் மிதிவண்டியை மெதுவாக மிதித்து சென்றான். அவளது அக்குளில் அரும்பியிருந்த முடிகள், இவனது நரம்பு மண்டலத்தின் சில செயல்படாத சுரப்பிகளையெல்லாம் தூண்டிவிட்டன. எவரோ தம்மை பார்ப்பதை உணர்ந்த அந்த பெண், மெதுவாக திரும்பி பார்த்தாள். அவளது கருவிழிகள் அரைவட்ட நிலையை அடைந்தது. அரைவட்ட பிறையான கண்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து பார்த்து பேரானந்தமடைந்த நீள்வட்டமான முகம், சில பொலிவூட்டும் கூறுகளையும் உள்ளடக்கிய, பள்ளித்தோழி நிறைமதி. இப்போது மிதிவண்டியை மிதிப்பதை நிறுத்திக்கொண்டன, அவனது கால்கள். மிதிவண்டி, மெல்ல உருண்டு நகர்ந்தது.

நிறைமதி, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டு வந்து, நிதானமாக பொழிலனை பார்த்தாள். பொழிலனின் முகத்தில் தெரிந்த மாற்றங்கள், அவளை ஆச்சர்யப்படுத்தியதாக தெரியவில்லை. பள்ளி சென்றுவரும் போது, பொழிலனை தொடர்ந்து அவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளின் பார்வை உணர்த்தியது. அதனையெல்லாம் ஆராயாமல், இவனது பார்வை துரிதமாக வேறெங்கோ போயிற்று... அவளது உள்ளாடையை துளையிட முயன்ற, முளைத்தும் முளையாத முன்மலர்களை ரசிக்க தொடங்கினான். மிதிவண்டியின் நகர்வில் காட்சி மெல்ல அகன்றது. அதே திசையில் அதே கோணத்திலிருந்த இவனது தலை, திரும்பி சாலையை கவனிப்பதையே மறந்து, உறைந்த நிலையை அடைந்திருந்தது.
உருண்டுகொண்டே சென்ற மிதிவண்டி, சாலையோரத்தில் அடிக்குழாயிற்காக கட்டப்பட்டிருந்த கட்டாயத்தில் மெல்லியதாய் மோதியது. நிலைதடுமாறி, மணலில் விழுந்தான். எவரும் பார்த்துவிடவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு எழுந்தான். அடியேதும் படவில்லை, அடிபட்டாலும் அதனை உணரும் நிலையில் அவனது மனம் இல்லை. ஒரு விபத்து நடந்துவிட்டால், அதிலிருந்து மீண்டெழுந்து திரும்ப வண்டியை இயக்குவதற்கு சற்று நேரம் எடுக்கும், அது போன்ற நிலையிலிருந்தான் அவன், அதனால் மிதிவண்டியை மிதித்து இயக்காமல், நடந்தே தள்ளிக் கொண்டு சென்றான்.

தம்மைப் பார்த்ததும், அவளுக்கு ஏன் எந்தவித வியப்பும் ஏற்படவில்லை? மாநிறமா தானே இருந்தாள், இப்ப கொஞ்சம் பளபளப்பு கூடின மாதிரி இருக்கே! தாம் பார்ப்பது தெரிந்தும் தனது கொங்கைகளை, அவள் ஏன் மறைக்க முற்படவில்லை? தன்னை வேற்றுமனிதனாக நினைக்காதது தான், காரணமா? அதெல்லாம் இருக்கட்டும், பெண்களுக்கு கமுக்கட்டுலல்லாம் முடி இருக்குமா? என்ன உணர்வு இது, எதனால் இந்த உச்சம்தொட்ட உணர்வு? புகையிலை காய போட்டிருந்தால், விண்ணவன் அண்ணன் சொன்ன மாதிரி அதிகபட்சமா புற்றுநோய் தான் வந்திருக்கும், இதென்ன அதவிட ஓத்திரியமா இருக்கும் போலிருக்கு!? இது தான் நிறைமதி வீடா? நல்லவேளையா அவங்க அப்பா என்னை பாக்கல, பாத்துருந்தா பத்தாவது தேர்வில் எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டிருப்பார், அவளை விட தாம் குறைவான மதிப்பெண்ணாக இருந்தால் அவமானமா போயிருக்கும்! என்றெல்லாம் சிந்தித்தபடி மிதிவண்டியை தள்ளிக்கொண்டு நடந்தான்.

பதினொன்றாம் வகுப்பு, ஆயக்காரன்புலம்
'இரா.நடேசனார் மேல்நிலைப் பள்ளியில்' பொழிலன் சேர்ந்திருந்தான். வகுப்புகள் தொடங்கி, போய்வரும் வேளையில், நிறைமதியும் ஆயக்காரன்புலத்திலிருக்கும் 'பெண்கள் மேல்நிலைப் பள்ளி'யில் சேர்ந்திருப்பதை அறிந்துகொண்டான். அப்போது தான் அந்த பெண்கள் பள்ளி, உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டிருந்தது. இல்லையென்றால், நிறைமதி, பொழிலன் சேர்ந்திருந்த பள்ளியில் தான் சேர்ந்திருக்க வாய்ப்பதிகம். இருவரும் மீண்டும் சேர்ந்து படிப்பதை, இயற்கை விரும்பவில்லை. இருந்தாலும், பள்ளி செல்லும்போதும் வரும்போதும் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அவளும் மிதிவண்டியில் தான், பள்ளி சென்றுவந்தாள். இதற்கு முன்பும் இதே சூழல் இதே வாய்ப்பு இருந்தது, ஆனால் பொழிலனின் கண்கள் நிறைமதியை காணவேயில்லை. இப்பொழுது தான், பொழிலனின் கண்கள் விரும்பி தேடும் உருவமாக நிறைமதி இருக்கிறாள். பொழிலன் தனது நண்பர்களோடு மிதிவண்டியில் செல்லும்போது, நிறைமதியும் தோழிகளுமான பெண்கள் கூட்டத்தை, பலமுறை வேகமாக தாண்டி சென்றதுண்டு. அப்படி முந்துவதற்கு முன், பின்னாலிருந்தபடியே அந்த கூட்டத்தில் நிறைமதி இருக்கிறாள் என்பதை அந்த கூட்டத்தினூடே ஊடுருவி நோக்கி, அறிந்துகொள்வான் அவன். நிறுத்தியோ சேர்ந்து சென்றபடியோ பேச, நிறைமதியும் சரி பொழிலனும் சரி, தனியாக செல்வதில்லை. தனியாக சென்றாலும், பேசும் மனத்திடம் பொழிலனுக்கு இருந்தது இல்லை. அவளை கடந்து செல்லும்போது, ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி அவள் புன்முறுவல் பூப்பாள். சிலமுறை வழக்கமாக செல்லும் நண்பர்கள் கூட்டத்தோடு அவன் செல்லாமல் தாமதமாக சென்ற நாட்களில், அந்த கூட்டத்தில் பொழிலனை தேடுவது போல் அவள் பார்த்ததை, அவனது நண்பர்கள் அவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ந்த நிறைமதி தான், திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற அவனது மாமா மகனிடம், அவனைப் பற்றி உசாவல் செய்திருக்கிறாள்.
புளியங்குளத்திற்கு குளிக்க போவதற்காக விண்ணவன் அழைத்தார், பொழிலன் சோப்புபெட்டி மற்றும் துண்டு எடுத்துக்கொண்டு, அவரோடு நடந்தான்.
"சொல்லிருக்கேன்லண்ணே உங்ககிட்ட... கருப்பம்பொலத்து வாத்திரியாரூட்டு பொண்ணு... அது, பாண்டியன் அத்தான்கிட்ட என்னை பத்தி விசாரிச்சிதாம். பத்திரிக்கைல என் எழுத்தை வச்சே கண்டுபுடிச்சிருக்குதுண்ணே" என்று விண்ணவனிடம் பகிர்ந்து கொண்டான், பொழிலன்.
"அது பேரு கூட, நல்ல பேராச்சேடா... நிறைமதியா?" என்றார் அவர்.
"ஆமாண்ணே, அது தான்" என்றான் இவன்.
"காலேஜ்ல எதுவும் மாட்டலயா ஒனக்கு? இதையே புடிச்சி தொங்கிட்டிருக்க?"
"அது தானண்ணே என்னை விசாரிச்சிருக்கு. நானா போய் அங்க அலைஞ்சிட்ருக்கேன்."
"விசாரிக்க தான செஞ்சிது. என்னமோ கட்டிகிட்டா பொழிலனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லிவிட்டுருக்கிற மாதிரி பேசுறே"
"என்ன தான் சொல்லுங்க, அதுக்கு என் மேல ஒரு இது இருக்குண்ணே. லவ் பண்ணாலும், ஈசியா கல்யாணம் பண்ணிக்கலாமுண்ணே. சாதி பிரச்சனை கூட இல்ல"
"ஓ... இப்பல்லாம் சாதி பாத்து தான் லவ்வே பண்றிங்களா? சிறப்புடா தம்பி"
"ஒரு பேச்சுக்கு சொன்னேண்ணே, ஒடனே அத புடிச்சிக்காதிங்க"
"பேச்சுக்கு கூட சொல்லாதடா... தமிழன், சாதி பாகுபாடு பாத்தவன் இல்லடா! எல்லாம் எடையில வந்தது. உலகத்துக்கே, வாழ்றது எப்படின்னு சொல்லிக்குடுத்த இனம்டா! இப்ப, இப்படி சீரழிஞ்சு கெடக்குது. தமிழனோட மரபுலயே முற்போக்கான சிந்தனைல்லாம் இருந்துருக்குடா பொழிலா! அதுனால தான் பெரியாரோட பேச்சு, இங்க எடுபட்டுச்சு. இதே மாதிரி, வடஇந்திய பக்கம் பேசியிருந்தா இந்த செல்வாக்கு இருந்துருக்குமாங்குறது டவுட்டு தான்டா! யாருக்குத் தெரியும், அடிச்சே கூட கொன்னுருப்பானுங்க! சிவவாக்கியர்னு ஒரு சித்தர்டா, 8ம் நூற்றாண்டுல வாழ்ந்தவராம். இந்த சாதி பாகுபாட்டைல்லாம் கிழிச்சு தொங்கவிட்ருக்கார், அப்ப கூட சாதிய கட்டமைப்பு இவ்ளோ வலுவோட இருந்ததா தெரியல, பாப்பான் பரப்புரைல இருந்துருக்கு. அப்பல்லாம் சொந்த நிலங்கள், எல்லாருக்கும் இருந்துருக்கு. பிற்கால சோழர் காலம் வரைக்கும், ஆதித்தமிழர்கள்கிட்ட கூட நிலம் இருந்துருக்கு. அப்ப பாப்பான் ஆதிக்கம் இருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் இருந்துருக்கு. எல்லாம் அதுக்கப்புறம் நடந்த மாற்றம்டா! பேசினா, பேசிட்டே போலாம். படிக்கிற பய நீ, இப்படி பேசலாமா? பெருஞ்சித்திரனார் எழுதின புத்தகம், எங்கிட்ட எவ்ளோ இருக்கு? அதெல்லாம் படிடான்னா, எங்கிட்ட இருக்குற கவிதை புத்தகமா தேடி பாத்து எடுத்துட்டு போறே! உன் காலேஜ் இருக்குதே காஞ்சிபுரம், அண்ணா பொறந்த ஊருடா! நா.முத்துக்குமாருக்கும் அந்த ஊரு தான். அங்க நெறய இலக்கிய கூட்டங்கள்லாம் நடக்குமாம், போய் கலந்துக்கடா! காலேஜ்லயா இதெல்லாம் சொல்லிகுடுப்பாங்க? போயிப் பாரு, நெறய தேடித்தேடி படி! ரொம்ப அறுக்குறானேன்னு நெனக்காத! நீ அப்படி நெனைக்கமாட்டே, ஏன்னா 'அந்த புத்தகத்துல என்னருக்கு இதுல என்னருக்கென்னுல்லாம்' ஆர்வமா கேக்குறே... அதனால தான் உங்கிட்ட இவ்ளோ சொல்றேன். அதை உக்காந்து படிக்க தான் மாட்றே! நான் எடுத்துகொடுத்த புத்தகத்தைலாம் படிச்சிருந்தா, சாதிய பிடிப்போட நீ பேசுவியா? ஒருத்தரோட புத்தகத்தை படிக்குறது மூலமா, அவரு வாழ்ந்து பெற்ற அனுபவத்த நீ படிச்சே பெறலாம். அதெல்லாம் வுடு!
இதெல்லாம் லவ்வுன்னு நெனச்சிட்டிருக்கியா? இது வேறும் இனக்கவர்ச்சி, படம் பாத்து ரொம்ப கெட்டுபோயிருக்க! ஒருத்தியோட அழகு பாத்து வர்றது எப்படிடா லவ் ஆகும்? அப்ப நாளைக்கே அவளுக்கொரு விபத்தாயி அழகு போயிருச்சுன்னா, இப்ப அவளை புடிக்கிற மாதிரியே அப்பவும் புடிக்குமாடா? புடிக்கும்பே... அப்படி புடிக்காதுறா ஒனக்கு! அழகு இன்னைக்கிருக்கும் நாளைக்கு போயிரும், குணம் தான்டா நெலைக்கும். குணத்தைப் பாத்து காதலிக்குற பக்குவம் உனக்கின்னும் வரல. அந்த பக்குவம் வந்த பிறகு, பேசி பழகி புரிஞ்சுகிட்டு எவளையாவது புடிச்சிருந்தா சொல்லு, நியாயம்களாம். அந்த பொண்ணு பத்தி சொல்றப்பல்லாம், இத பல தடவை சொல்லிருக்கேன் உனக்கு. அப்பல்லாம் சும்மா சைட்டடிக்குறதுண்ணேம்ப, இப்ப லவ்வுங்குற" என்று விண்ணவன் சொல்லி முடிக்கும் போது, குளத்தை அடைந்திருந்தார்கள்.
பொழிலன், துண்டு கட்டிக்கொண்டு குளத்திலிறங்கி நீந்த ஆரம்பித்தான். மல்லாக்கப்படுத்தபடி தாண்டகம் அடித்துக் கொண்டு, விண்ணவன் சொன்னவற்றை அமைதியாக சிந்தித்து பார்த்தான். குழம்பிய நீருக்குள் மூழ்கியபடி நீந்தும் அவனின் மனதில், தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள் நீந்தின. அவனின் அமைதிக்கான பொருளை புரிந்துகொண்டவராக தனக்குள் சிரித்துக்கொண்டார், விண்ணவன். அந்த சிரிப்பின் நீட்சி உதட்டோரமும் சிறிதாக வெளிப்பட்டது.

வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட, பொழிலனால் சொந்த ஊருக்கு வர முடிவதில்லை. கடந்த நான்கு வருடங்களாகவே, ஊருக்கு போக வேண்டுமென்று தோன்றினால் மட்டுமே  போய்வருவது வழக்கமாகிவிட்டது. பண்டிகை காலங்களில் விடுப்பு கிடைப்பது கடினம், திருமணமானவர்கள் விடுப்பு எடுக்க முனைப்பு காட்டுவார்கள், தானும் அவர்களுக்கு ஒத்துழைத்து அவன் பண்டிகை காலங்களில் ஊருக்கு போய்வருவதை தவிர்த்துவிடுவான். இந்த வருடம் பொங்கலுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு நிறுவனத்திடம் மூன்றுநாள் விடுப்பு பெற்று, ஊருக்கு புறப்பட்டான். மூன்று மாதங்களுக்கு பிறகு ஊருக்கு செல்வது சிறியதாக ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. விடிகிற தருவாயில் தஞ்சாவூர் தாண்டி மன்னார்குடி போகும்வழி நெடுக பச்சைபசேலென்ற நெல்வயல்களை பார்த்துக் கொண்டு பயணிப்பது, புத்துயிர் பெருக செய்யும் அனுபவம். அதை பெறுவதற்கு ஏற்றபடி, தனது பயணத்தை திட்டமிடுவது அவனது வழக்கம். அந்த அனுபவங்களை ருசித்தபடியே பயணித்து, காலைவேளையில் திருத்துறைப்பூண்டி வந்து சேர்ந்தான்.
திருத்துறைப்பூண்டியிலிந்து வேதாரணியம் போக பெருங்கூட்டம் காத்திருந்தது. அரசாங்க பேருந்து ஒன்று வந்துசேர, அடித்துபிடித்து ஏறினார்கள், இவனுக்கு அமர்ந்து தான் பயணிக்க வேண்டுமென்ற தேவையில்லை ஆதலால், பொறுமையாக பேருந்து புறப்படும் முன் ஏறிக்கொண்டான். தனியார் பேருந்தாக இருந்தால், தஞ்சாவூரை தாண்டியதுமே இளையராஜாவின் இசை வழித்துணையாக வந்துவிடும். இது அரசாங்க பேருந்து என்பதால், அலைபேசியின் ஒலிப்பான்களை காதில் செருகிக்கொண்டான். "ஆத்தங்கரை மரமே அரசமர இலையே...ஆலமரக்கிளையே அதிலுறங்கும் கிளியே" இசையின் பின்புலத்தோடு, சாலையோர காட்சிகள் நகர துவங்கின.
தாணிக்கோட்டகத்தில் புதியதாக சில கடைகள் முளைத்திருந்தன, "கல்லொன்று தடை செய்தபோதும், புல்லொன்று புதுவேர்கள் போடும், நம்காதல் அதுபோல நீளும்." வாய்மேடு வந்தது, பெரும்கூட்டம் ஒன்று இறங்கிவிட அதைவிட பெரிய கூட்டம் ஏறத் தொடங்கியது, அந்த கூட்டத்தில் குட்டியானையளவில் அரேபியன் குதிரை உயரத்தோடு இருந்த பொம்புள, செருப்புக்காலோடு அவனது காலில் ஏறி மிதித்து நின்றார். இவனது காலில், அவரது செருப்பில் ஒட்டியிருந்த மண் நரநரவென அறைபட்டு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. "கால மிதிக்கிறிங்க..." என்று முனகியபடி அந்த பொம்புளயை தள்ளியதும், அவள் திரும்பினாள். அறைவட்ட பிறை போன்ற கண்கள்... நிறைமதியே தான், என்ன நிறை கொஞ்சம்(!) கூடிருச்சு!
நிறை கூடியதால், மிதி வலிச்சிருக்கு!
இனி அவள் 'நிறைமிதி'...
"நிலவில் பொருள்கள் எடை இழக்கும்... நீரிலும் பொருள் எடை இழக்கும்... காதலில் கூட எடை இழக்கும், இன்று கண்டேனடி அதை கண்டுகொண்டேனடி... காதல் தாய்மை ரெண்டு மட்டும் பாரமென்பதை....." எரிச்சலோடு ஒலிப்பானை காதிலிருந்து எடுத்துவிட்டான்.

பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது, விண்ணைப் பார்த்து விண்ணவனுக்கு நன்றி சொன்னான்.

Sunday, 17 June 2018

அப்பாவின் அன்பு


அப்பாவை கோபக்காரராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவருக்கு என் மீதிருக்கும் பாசத்தை உணர வைக்கும் தருணம் பதினொன்றாம் வகுப்பு படிக்கிற போது தான், வாய்க்கப்பெற்றது.
பள்ளிக்கூடத்திற்கு மிதிவண்டியில் சென்ற நான், அன்று இயல்பில் ஏற்பட்ட சிறிய தாமதத்தால், வீரன் உண்டியலில் இறங்கி சாமி கும்பிடுவதைத் தவிர்த்தவனாய் வேகமாக செல்லலானேன். ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மிதிவண்டியை நிறுத்த, இறங்க முனைகையில் மிதியடியில் சிறிய நழுவல் ஏற்பட்டு, தடுமாறுகையில் மிதியடி காலின் கட்டைவிரல் நகத்தை பெயர்த்துவிட்டது. இரத்தம் கசிய ஆரம்பித்து வலியும் ஏற்பட, அன்று பள்ளிக்கு விடுப்பெடுக்க, காரணம் கிடைத்துவிட்டது.

'பவானி ஆடையகம்' சென்று இராஜசேகரன் அண்ணனை, வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து தகவலைச் சொல்லி அப்பாவை வர சொல்ல, கேட்டுக்கொண்டேன். அப்பா வருவதற்கு முன்பே, அண்ணன் என்னை இராஜசேகர் மருத்துவரிடம் அழைத்து சென்று, முதலுதவி பெற செய்தார். இராஜசேகர் ஐயா மருந்துகளை பூசி, ஊசியும் போட்டுவிட்டார். சில மருந்துகளையும் கொடுத்து, தினமும் கட்டைப் பிரித்து மருந்துகளை இட்டுக் கொள்ள சொன்னார். "திரும்ப சிகிச்சைக்கு வர வேண்டுமா" என அப்பாவியாகக் கேட்ட என்னிடம், "நெகம் பேந்ததுக்கு நாப்பது தடவை வரனுமா?" என்று சிரித்தபடியே டாக்டர் வழியனுப்பினார். அப்பா வந்ததும், பள்ளி செல்வதிலிருந்து 'ஒருநாள் விடுதலை' கிடைத்த மகிழ்ச்சியில், வீடு திரும்பினேன்.

வீடு வந்து சேர்ந்ததும், பூவெடுத்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு சின்னம்மா, பெரிய விபத்துக்குள்ளானவனைக் காணும் வேகத்தோடு வந்த போது தான் தெரிந்தது, தொலைபேசியில் எனக்கு அடிபட்ட தகவல் கேட்டவுடன், அப்பாவின் மிதிவண்டி பஞ்சராகி கிடந்தபடியால், அப்பா அழுதுகொண்டே, பக்கத்துவீட்டு மிதிவண்டியை கேட்க சென்றிருக்கிறார். அப்பா அழுதுகொண்டே வந்த கோலம் கண்டு, எனக்கு பெரிய விபத்து நடந்துவிட்டதாக, அக்கம்பக்கத்தினர் நினைத்திருக்கின்றனர். இவ்வளவிற்கும் இராஜசேகரன் அண்ணன் 'நெகத்தில் சிறிய அடி தான், மெதுவா வாங்க" என்று தான், தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.
அப்பாவிற்கு என்னை அவ்வளவு பிடிக்குமா என்று துவங்கிய சிந்தனை, இதை எப்படி இவ்வளவு நாட்களாக உணராமலே இருந்திருக்கிறோம் என்று தொடர்ந்தது. 

எனக்கேற்படும் சிறு சிராய்ப்பு கூட, அப்பாவின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்துமளவு, அவரென்னை நேசிப்பதை, முதன்முறையாக புரிந்துகொண்டேன். அதன்பிறகு, அப்பாவை நான் பார்க்கும் கோணமே, மாறிப்போனது.

அடுத்து, பொறியியற் கல்லூரியின் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது, விடுதியில் சிறிய ராக்கிங் பிரச்சனையில் எனது பெயரும் மாட்டிக்கொண்டது. 4 பேர்களின் பெற்றோரும் வந்து, கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மற்றவர்களும் பெற்றோரை அழைத்துவர இசைவு தந்துவிட, எனக்கும் வேறுவழியில்லாமல் போயிற்று. விளையாட்டாக செய்தது சிக்கலில் போய் முடிந்துவிட்டதாக எடுத்துக்கூறி, அப்பாவை வர சொன்னேன். இரவுநேர பயணமாக 10 மணிநேரம் பயணித்து, காஞ்சிபுரம் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். நான் மட்டும் தான் அப்பாவோடு வந்திருந்தேன், மற்ற இருவரும் சித்தப்பா மாமா என்று சென்னையிலிருந்த உறவினரை அழைத்து வந்திருந்தனர். இன்னுமொரு நண்பன், எவரையும் அழைத்து வரவில்லை.

3 பேரும் தத்தமது குடும்ப பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, கல்லூரி முதல்வரைக் காணப் போனோம். சிறிதுநேர காத்திருப்பின்போது, விடுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். எனது தந்தையும், அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்தார். கல்லூரி முதல்வர் அழைத்ததும், அவரது அலுவலகத்தில் நுழைந்தோம். 

குடும்ப பிரதிநிதிகளை அமர சொல்லி, கல்லூரி முதல்வர் பேச ஆரம்பித்தார்.
"வாரத்துல ரெண்டு நாளு வாழப்பழம் போடுறோம் சார், நல்ல சாப்பாடு போடுறோம், என்ன கொற இவங்களுக்குங்குறேன்" என்று முதல்வர் பேசிய போது, "இந்த வாழப்பழம் போடுற வசனத்த விடமாட்டானே இவன்" என்று எனக்கு எண்ணம் தோன்றியதால் வந்த சிரிப்பை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
மேலும் தொடர்ந்தார், "ஹாஸ்டல்லயே சாராயம் குடிக்கிறானுவ சார்" என்று முதல்வர் சொன்னதும் நானும் எனது அப்பாவும் ஒரே நேரத்தில் குறுக்கிட்டோம்.

"அதெல்லாம் இல்ல சார், வேணும்னா blood test பண்ணி பாத்துக்கோங்க" என்றேன் நான், testலாம் பண்ணமாட்டாங்க என்ற தைரியத்தில்.

"அப்படில்லாம் பண்ணமாட்டாங்க சார், தங்கமான பசங்க" என்றார் அப்பா.

"உங்க பசங்கன்னு சொல்லல, பொதுவா சொல்றேன்" என்றார் முதல்வர்.
"ராக்கிங் புகார், ஒண்ணும் பண்ண முடியாது. விடுதியை விட்டு நிரந்தரமா வெளியனுப்புறோம். வெளிய எங்கயாவது தங்கிக்க சொல்லுங்க, இந்தாப்பா எல்லார் போட்டோவையும் நோட்டீஸ் போர்டுல ஒட்டி circular போட்டு விட்டுறு" என்றார் முதல்வர்.

நண்பனின் சித்தப்பா "நோட்டீஸ் போர்டுல போட்டோ போடுறதெல்லாம் பெரிய punishment சார்" என்றார். நான் அவரைப் பார்த்து முறைத்ததை கவனித்து அமைதியானார். தண்டனையே வேண்டாம் என்று பேசாமல், புகைப்படம் பற்றி பேசியது, எனக்கு பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டார்.

எனது அப்பாவோ "ஹாஸ்டல்லேந்துலாம் அனுப்பிடாதிங்க சார், பசங்க படிப்பை பாதிக்கும்" என்று கும்பிட்டபடி கெஞ்சினார். பேசும்போதே அப்பாவிற்கு கண்கள் கலங்கிற்று, எனக்கும் கண்ணீர் முட்டியது. சிரமப்பட்டு செலவு செய்து படிக்க வைக்கும் அப்பாவை, இப்படி கண்டவனிடமெல்லாம் கெஞ்ச வைத்துவிட்டோமே என்று நினைத்தபோது, கட்டுக்கடங்காமல் எனக்கு கண்ணீர் பொங்கி வடிந்தது.

விடுதியிலேர்ந்து அனுப்பினாலும் வெளியில் தங்கி படிக்கலாம், இதற்காக கெஞ்சி வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அப்பா ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பாவின் மீது ஆத்திரம் கொள்வதா, எனது திமிரை எண்ணி வருந்துவதா என்ற இரண்டு உணர்வுகளுக்குமிடையே, ஊசலாடி தவித்தது, எனது உள்மனம்.

மெத்தப் படித்த அதிகார வர்க்கத்தின் மீது அப்பாவிற்கு இருந்த இயல்பான இடைவெளி, எனது படிக்கும் சூழல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையுணர்வு, இந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு எனது எதிர்கால கல்வியில் எதுவும் வினையாற்றுவார்களோ என்ற பயம், இவையெல்லாம் அப்பாவை அழ வைத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், எனது கல்வியின் மீதும் எனது எதிர்காலத்தின் மீதும், எந்தளவிற்கு கவனத்தோடும் அக்கறையோடும் அப்பா இருக்கிறார் என்பதைத் தான், அவரது கண்ணீர் துளிகள் உணர்த்தின.

கல்லூரி முதல்வரின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், நண்பனின் சித்தப்பாவை கடிந்து கொண்டேன். அப்பாவிடம் பேச என்னிடம் வார்த்தைகளில்லை. சிறிதுநேர மௌனத்திற்குப் பின், "வெளியில தங்குறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா. கூட படிக்கிறவங்க தங்கிருக்காங்க, அவங்க கூட தங்கிப்பேன்" என ஏதேதோ ஆறுதல் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
அப்போது, 'இது போன்ற தவறுகளை இனி தவிர்க்க வேண்டும்' என்று முடிவெடுப்பதற்கு பதிலாக, 'இனி என்ன பிரச்சனையானாலும் அப்பாவை வர சொல்லக் கூடாது' என்று முடிவெடுத்தேன். 

அதற்கு பின்னான நாட்களில், இது போன்ற பிரச்சனைகளைக் கையாள, காஞ்சிபுரத்திலேயே சித்தப்பாக்களையும், அண்ணன்களையும், மாமாக்களையும் ஏற்பாடு செய்து கொண்டோம் என்பது கிளைக்கதை.

அப்பாக்கள் மகனுக்காக சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும், காவேரியின் 10 டிஎம்சி நீருக்கு சமம்.

படிக்கின்ற காலங்களில், எவ்வளவு பணம் கேட்டாலும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல், "சரிப்பா அனுப்பிடுறேன்" என்ற வார்த்தைகள் தான் வரும். அதனால் தான், நான் சம்பாதித்து கொடுக்கும் போதும் அதே மாண்பை கடைபிடிக்க விழைகிறேன், மனைவி விடுவாளா? அவளுக்கு கணக்கு சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.

எனக்கு பெண்பார்க்கும் படலம் நீண்டு கொண்டே போன போது, 27வயதிலேயே திருமணம் செய்துகொள்ள விரும்பாதவனாக, வெளிநாடு போய் சம்பாதித்துவிட்டு வருகிறேன் என்று அப்பாவிடம் கேட்டால், "ஏம்பா? உன் மனசுல யாரையும் நெனச்சிருக்கியா?" என்றார். இல்லையென்று மறுத்தால், "வேற சாதியா இருந்தாலும் பரவால்ல சொல்லு" என்றார். அப்போது தான் தோன்றியது "ச்ச இப்படியொரு வாய்ப்பு இருந்துருக்கே, யாரையாவது காதலிச்சுருக்கலாமோ"  என்று, "நாமளா காதலிக்கல, நம்மள தான எவளும் காதலிக்கல" என்பது வேறு சுள்ளென்று உரைத்தது.

ஒரு அப்பாவாக நீங்கள் எனக்கு செய்தவற்றில் 10ல் ஒரு மடங்கை, நான் எனது மகனுக்கு செய்துவிட்டாலே, எனது மகன் வாழ்நாளெல்லாம் என்னைப் போற்றுவான்.

நிறைவோடும் நெகிழ்வோடும் மகிழ்வோடும் மனதார உன்னை நேசிக்கிறேன் அப்பா! ஆயுள் முழுதும் உங்கள் அன்பை ஆராதிப்பேன்!

#LoveYouAppa
#FathersDay2018

Wednesday, 18 April 2018

ராம மடமென்னும்...

ராம மடம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, "கோய்ந்தா கோய்ந்தா" தான். 'சின்ன தாத்தா' என எல்லோராலும் அழைக்கப்படும் கோவிந்தசாமி தாத்தா தான், பஜனை பாடுவார். புரியாத மொழியில் 'பாண்டுரங்கா விட்டேளா பண்டேரிநாதா விட்டேளா' என தொடங்கி ஏதேதோ பாடிக்கொண்டிருப்பார். 'ஹரிகர ராம சங்கீர்த்தனம்' என்று சொன்னதும், கோய்ந்தா கோய்ந்தா என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும். அந்த வரி அவரது வாயிலிருந்து விடுபடுவதற்காக காத்திருப்போம், அவர் அதை சொன்னதும் 'கோய்ந்தா கோய்ந்தா' என கட்டிடம் அதிருமளவிற்கு கத்துவோம். அப்படி கத்துவதில் அதீத ஆர்வமிருக்க காரணம், அதை நாங்கள், கோவிந்தசாமி தாத்தாவை 'கோய்ந்தா' என ஒருமையில் விழித்து கிண்டலடிக்கும் வாய்ப்பாகக் கருதினோம். அதிலொரு அளவில்லா ஆனந்தத்தையும் அடைந்தோம்.

எங்கள் ஊரின் பழைய ராம மடம், பெரிய ஓட்டு கட்டிடமாக இருக்கும். கட்டிடத்தின் முதல்பாதி, 50~60 பேர் அமரும்படியான பெரிய கூடம், இரண்டாம் பாதியின் மையமாக மடத்தின் கருவறையும், அந்த கருவறையை சுற்றிவர கட்டிடத்துக்குள்ளேயே சுற்றுப்பாதையையும் கொண்டதாக இருக்கும். சுற்றுப்பாதை, நால்வர் சேர்ந்து நடக்கும்படியான அகலமானதாக இருக்கும். அந்த சுற்றுப்பாதை, விழாக்காலங்களில் சமையலறையாக மாற்றம் பெறும். கல்லை அடுக்கி அடுப்பை அமைத்து, பொங்கல் புளியோதரை வடை எல்லாம் சமைக்கப்படும். கூடத்தின் இடதுபுறமாக, மரத்தால் செய்யப்பட்ட கருடவாகனம் ஒன்றிருக்கும். இறக்கை பொருத்தப்பட்ட, மனித உருவம்(!) கொண்ட கருடர் அவர், சிறுவயதில் அவரைத் தான் ராமன் என்று நினைத்திருந்தேன். முறுக்குமீசை வைக்கப்பட்டு, ஓட்டப்பந்தயவீரர் ஓடுவதற்கு ஆயத்த நிலையில் இருப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பார், கருடர். விழாக்காலங்களில் ராமனது புகைப்படத்தை இதன் மேல் வைத்து ஊர்வலம் நடத்த, இந்த கருடவாகனம் பயன்படுத்தப்படும்.
கூடத்தின் வலதுபுறம், சுவற்றில் ஆஞ்சநேயரின் உருவம் வரையப்பட்டிருக்கும். மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் அந்த ஆஞ்சநேயருக்கு, விழாக்காலங்களில் வடைமாலை அணிவிப்பார்கள்.

ராம மடத்து திடலில் நடக்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி, மங்கலான படிமங்களாக மனதின் அடுக்குகளில் படிந்திருக்கிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு தந்துவிட முடியாத கலை பொக்கிஷம், பொம்மலாட்டம். எனக்கும் பொம்மலாட்டம் சார்ந்த அனுபவங்கள், முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. தார்பாய் கொண்டு அமைக்கப்பெற்ற கொட்டகையில், ஒருவர்பின் ஒருவராக பயணச்சீட்டு பெற்று செல்லும் வகையில் நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நடந்தேறும் கதை எது பற்றியது, திரையில் பொம்மைகள் எப்படி அசைவு பெறுகின்றன என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, தூக்கம் வந்துவிடும். அம்மா மடியில் அயர்ந்துறங்கி எழுந்தால், 'காப்பி குடிக்கிறியாப்பா' என்று கேட்டுக்கொண்டே அடுப்பங்கறை செல்வார் அம்மா. "எப்பம்மா தூங்கினேன், எத்தனை மணிக்கும்மா முடிஞ்சிது?" என்று கேட்டால், "ஒனக்கு டிக்கெட் எடுத்ததே தெண்டம், நீ தான் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே!" என்பாள்.  சிலமுறை, முருங்கைக்காய் கீரை எனக் கேட்டு, பாவாடை சட்டையணிந்த பெண் எங்கள் வீட்டிற்கு வருவாள், யாரென்று கேட்டால், "இவொ தான்டா பொம்மலாட்டம் நடத்துறது" என்று அம்மாவிடமிருந்து பதில் வரும். இவ்வளவு தான், பொம்மலாட்டம் பற்றி, நினைவடுக்குகளில் தொக்கி நிற்பவை.

பொம்மலாட்டங்களை எல்லாம் பெட்டிகட்டி அனுப்பியது, திரைப்படங்கள். ஃபிலிம்சுருள்களைக் கொண்டு திரையிடப்படும் திரைப்படங்கள் அவை. இவ்வகையான திரையிடுதலில், கூடுதல் வசதி என்னவென்றால் பின்புறத்திலிருந்தும் திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம். திரையின் பின்னாலிருந்து பார்க்கும்போது, இடது-வலது பக்கமாற்றம் ஏற்படும். அதாவது, தமிழ்நாட்டு மரபு சேலைகட்டு, சேட்டுவீட்டு சேலைகட்டாக மாற்றம் பெறும்.
ஒரு படத்தை திரையின் பின்புறத்திலிருந்து பார்த்து விட்டு, அடுத்தமுறை முன்புறத்திலிருந்து பார்க்க நேர்ந்தால், அதே படம் வேறோரு திரைப்படமாகத் தோன்றும். ஃபிலிம்சுருள்களிலிருந்து சில ஃபிலிம்கள் உதிர்ந்து, மண்தரையில் புதைந்து கிடக்கும், அடுத்தநாள் அதைப் பொருக்க அணிவகுப்புகள் நடத்துவோம். சேகரித்த ஃபிலிம்களைக் கொண்டு, தாத்தாவின் வேட்டியை திரையாக்கி, வெயிலொளியை சிறைபிடித்து பூதக்கண்ணாடி வழியாக பாய்த்து, மாட்டுக்கொட்டகையில் திரையிடுவோம். கிடைத்த ஃபிலிம்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்படும். எல்லா திரைப்படத்திலும் கடைசியாக சண்டைக்காட்சியின் ஃபிலிமை காண்பித்து, வணக்கம் என்கிற ஃபிலிமோடு முடித்ததாக நினைவிருக்கிறது.

இப்போது,
✴"ராமன் என்ன, தமிழர்களின் கடவுளா?",
✴"இராமாயணம் என்னும் கதையில் வரும் கதாப்பாத்திரத்தை, இவர்கள் ஏன் கடவுளாக வழிபடுகிறார்கள்?",
✴"அப்படியானாலும், ராவண பூமியில், ராமன் எதற்காக வழிபடப்பட்டார்?",
✴"சிவனுக்கு பெரிய பெரிய கோவில்கள் இருக்கிற ஊரில், ராமன் சிறிய மடத்தில் முடக்கிவைக்கப்பட்டதன் பின்னாலிருக்கும், எமது முன்னோரின் விழிப்புணர்வு எப்படிப்பட்டது?"
போன்ற எண்ண அலைகள் வந்து மோதுகிறது.

இதன் நீட்சியாக, இந்த இதம்தரும் நினைவுகளை ஏந்தி நிற்கும் வகையில், ராம மடம் ரம்மிய இடமாகிறது. 

Sunday, 7 May 2017

ஆசைமுகம் மறந்து போச்சே

துறவறம் பூணுவோருக்கு, அத்தனையும் துறப்பதற்கான பக்குவமும் காரணமும் இருக்கும். அப்படிப்பட்ட பக்குவமில்லாத பதின்மவயதில், துறவறத்திற்கு இணையானதொரு தியாகம் செய்ய நிர்பந்திக்கும் கசப்பான அனுபவமான காதலை துறத்தலென்ற படியை
இந்தியன் கடந்தே ஆக வேண்டும்.

சாதகங்கள் தான் குறைவேயொழிய தடைகளுக்கொன்றும் குறைவேயில்லை. சாதி, பொருளாதார வேறுபாடு, மதம், இப்படி ஏதேனும் ஓர் உடையிட்டு தடை வந்தே தீரும்.

*******************************************
ஆசைமுகம் மறந்து போச்சே 
இதை யாரிடம் சொல்வேனடி தோழி 
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் 
நினைவுமுகம் மறக்கலாமோ...? 
கண்ணில் தெரியுதொரு தோற்றம் -அதில் 
கண்ணன் அழகு முழுதில்லை... 
நன்னமுகவடிவு காணில் -அந்த 
நல்லவள சிரிப்பை காணோம். 
கண்ணன் முகம் மறந்துபோனால் -இந்த 
கண்களிருந்து பயனுண்டோ...? 
வண்ண படமுமில்லை கண்டாய் -இனி
வாழும் வழியென்னடி தோழி...? 
                                -பாரதியார் 
********************************************

அதற்காக, ஆசைமுகம் மறந்தா போய்விடும் என்று கேட்பீர்களாயின், ஆம் என்பதே எனது பதிலாகவிருக்கும்.

வெளிப்படுத்தப்பட்ட காதல்கள், 
பின்னாளில் கொச்சைபடுத்தப்படலாம்; 
உள்ளத்தில் உறைந்தவை, புனிதம் இழப்பதுண்டோ...? 
அப்படிப்பட்ட காதல், எவரை தான் விட்டுவைத்தது...?

சரியாக 3 வருடம் தினமும் பார்த்துக்கொள்வோம்,
பார்க்க மட்டுமே செய்வோம்.
(படிக்கிற உங்களுக்கு மட்டுமில்ல, எழுதுறபோது சம்மந்தப்பட்ட எனக்கே சிரிப்பு தான் வருது)
காலையில் இருமுறை,
மதியம் மூன்றுமுறை,
சாயங்காலம் இருமுறை,
எதிர்படவும் புதிர்படவும் செய்வோம்.

பேரு வேணாம்...
பேர்ல என்ன இருக்கு...
இப்ப பேர் மட்டுமே இருக்கு 

24 செகன்ட் நான்கு விழிகளும் புனைவுரும், பின் விலகும்...
விழிகள் சொல்லமுடியாததையா,
உதடுகள் சொல்லிவிடப்போகிறதென இறுமாப்பு இருவருக்கும்.
விழிகள் வார்த்த காவியங்களும்
கண்கள்கூடிய ஓவியங்களும்
ஜீவனுள்ளவரை ஜீவித்தேவிருக்கும் சிரஞ்சீவியாய்...

என் பெயர்,
அவளை திரும்ப வைத்ததும் உண்டு
சிலமுறை புன்முறுவல் அரும்ப வைத்ததும் உண்டு...

அவளெழுதிய Testpaper திருத்தும் பாக்கியம் கிடைத்தது, RA sir மூலம்...
அதிலொரு தாளின் ஓரம், அவள் கைகளால் அவளே வரைந்த ஓவியமொன்றை கிழித்து பர்ஸிற்குள் வைத்திருந்தேன். அவ்வோவியம் அவளின் பெயரென உள்ளம் உணரவே 4 வருடம் அவசியமாயிற்று. அந்த துண்டுகாகிதம் ஒருமுறை எனது அக்கா கண்ணில்பட்டுவிட்டபோது, பதிலேதுமில்லாததால் கேள்வியம்பு பாயாதிருக்க தூக்கியெறிந்தேன். பின்பு தேடி கிடைக்கவேயில்லை... அவள் நினைவாயிருந்த ஒற்றை objectம் பறிபோயிற்று.

பிப்ரவரி 14, 2002 அன்று, நண்பர்களின் வற்புறுத்தலால் காதலை சொல்ல gate தாண்டி குதித்தேன். RM sir, பார்த்துவிட்டார்.
பேனா விழுந்துவிட்டதென சமாளித்தேன்.

"உண்மையில் விழுந்தது, பேனா அல்ல...
ரதியோடு எழுதப்படவிருந்த விதி"

Wednesday, 23 November 2011

மன்னிப்பாயா???

கடிதம்,நினைவுகளை சுமந்துவருவது,
நிகழ்காலத்தில் ஆனந்தத்தையும்
பின்னாளில் சோகத்தையும் தரவல்லது.


எப்போதும் போல் இப்போதும் கண்ணீர்
இடர்பாடுகளுக்கிடைய படித்து முடித்தாள், 
கவிதை நிரம்பிய கடிதத்தை.
பிருந்தா...

இலக்கை சரியாக அடைந்த அம்பு போல மற்றொன்று எய்ய தெரியா வேடன்
போல்
பிரம்மனை ஆக்கியவள்.
இவள்போல இன்னொருத்தியை படைக்க தெரியவில்லை அவனுக்கு.
"பேரழகி"என்பதற்கு விரிவுரை தரும் அவள் உருவம். இவள் ஆசிரியர்பயிற்சி
முடித்து வீட்டில், தேர்வுமுடிவுக்காக காத்திருக்கிறாள்
முகநூலை திறந்தாள். அவளின் காதலனின் இருப்பை காட்டியது, அவனின் பெயர் அருகே இருந்த பச்சைப்பொட்டு 
பாலு...
காஞ்சிபுரத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். கவிதை எழுதுவது அவனுக்கு மிகபிடித்தமான ஒன்று. நல்லா பேசுவான் செண்டிமெண்டல் இடியட். 
"Hai..."இவள்,
தாமதத்தோடு "Hi..."அவன்
பிஸியா?
"இல்ல இல்ல! கிளம்பலாம்ன்னு நினைச்சேன். சொல்லு!"என்றான். 
"கெளம்ப
வேண்டியது தான,அப்புறம் என்ன சொல்லு? எதோ தியாகம் பண்ற மாதிரி" 
எப்போதும் இவர்களின் உரையாடல் இப்படி தானிருக்கும். 
சிறது நேர பேச்சுக்கு பின்,வழக்கம்போல தூக்கம்வருவதாக
சொல்லி புறப்பட்டான் காதலன். 
அவன் விடைபெற்றதும்,அவனது நினைவுகள் புழங்கதொடங்கிற்று.
நினைவுகளின் கேள்விகளுக்கு நிஜத்திடம் விளக்கமில்லை.
காதலை ஏற்றுக்கொள்ளும் வரை, அவனிடமிருந்து கிடைத்த பாசம்,
எங்கே போனது இப்போது? 
விரட்டியது
விடைதெரியா கேள்விகள்.ற்றுமோரு  கடிதம் படிக்க தொடங்கினாள்.
மூக்கு புடைக்க புடைக்க
விம்மி விம்மி அழவைத்தது அக்கடிதம்.
இந்த கடிதம் எழுதிய காதலன் இப்போது
எங்கே தொலைந்து போனான்? 
இந்த கடிதம் எழுதிய நாட்களை அவனுக்கு நினைவுபடுத்த விரும்பி முகநூலில்
அந்த கவிதையை பகிர்ந்தாள்.
காலை எழுந்ததும் இந்த பகிர்தலை பார்த்த
பாலு,கடுங்கோபமுற்றான்.
அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான்.
கிட்டத்தட்ட
2மாதங்களுக்கு பின் அழைக்கிறான்,
அவளின் குரல் கேட்டதும் கோபம் கொஞ்சம்
குறைந்தது உண்மையெனினும் கோபத்தை விட்டுக்கொடுக்காமல் 
"ஏன் அந்த
கவிதையை FBல போட்டே?
"ச்சும்மா..."
"என்ன சும்மா?
அது நா உனக்காக எழுதினது
அத்தோட அந்த போஸ்ட்ல என் பேர கூட போடல நீ.. 
அது என்ன ஒன்னோடதா? 
இடைவிடாது பேசினான்.
எப்படி சொல்வாள், அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என. 
மௌனம் மட்டுமே பதிலாய் நின்றது. 
"ஒங்கிட்ட தான் பேசிகிட்டு
இருக்கேன்" 
"ஸ்ஸ்ஸாரி"
"இப்போ ஏன் அழுற?" 
மௌனம்ம்ம்ம்ம்... கோபம் வெகுவாக குறைந்தது.
அழைப்பு துண்டிக்கபட்டது... 
வனுக்கொன்றும் பாசம் இல்லாமல் போய்விடவில்லை. 
முன்பு போல் இப்போது பேசமுடிவதில்லை, இவன் மனதில் 
தனது நடத்தையில் எந்த தவறும் இல்லை என்பதை அழுத்தமாக நம்பினான். 
எல்லா உறவுகளிலும் ஆரம்ப நாட்களில் அதிகம் பேச வேண்டியிருக்கும், 
புரிதலை மேம்படுத்தி கொள்ள.. அதுவும் ஆண் பெண் உறவில் சொல்லவே தேவையில்லை.அவ்வுறவு முதிர்வு பெற்று பக்குவபட்டபின் 
அவ்வளவாக பேச வேண்டி இருப்பதில்லை. இதுவே அவள் கேள்விகளுக்கு 
இவன் எப்போதும் வைத்திருக்கும் விளக்கம்.   
வளுக்கோ,அவளது நாட்களில் நடப்பதை யாரிடம் 
பகிர்ந்துகொள்கிறாளோ அவர்களை நெருக்கமானவர்கள் என்று நினைப்பாள்.
ஆரம்பநாட்களில் பேசியது போலவே அவன் பேசிக்கொண்டிருக்க
வேண்டும் என்று.. 
வளை இவனுக்கு அறிமுகப்படுத்தியது சமூக இணையதளம் தான், 
முகநூல்... இவனது நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டது கூட அவளில்லை,
அவளது தோழி ஜெனிதா மேரி, அதுவும் இவனது எழுத்துக்கள் பிடித்துப்போய் ஏற்றுக்கொண்டாள்.
எழுத்துக்களில் பெரிதாக ஈடுபாடில்லை பிருந்தாவிற்கு..
எப்போது ஆன்லைனுக்கு வந்தாலும் இவளுக்கு Message செய்யாமல் இருக்கமாட்டான்.எல்லோருக்கும் பதில் அளிப்பது இவளது தனித்துவம்.
நம்மை மதிப்போரை நாமும் மதிக்க வேண்டும் என்பது இவள் எண்ணம்.
தனித்துவம் தானே? இந்த குணம் பெரும்பான்மையான பெண்களுக்கு 
இருப்பதில்லை,அப்படி இருந்தாலும், ஆண்கள் அதனை ஆபத்தான குணம்
என்று எண்ண வைத்துவிடுவர்.
ரம்ப நாட்களில் மனம் விட்டு பேச மாட்டாள் இவள். 
இவனது பாசமும், பேச்சும் வீழ்த்தியது, அவளின் வைராக்கியங்களை... 
கொஞ்சம் கொஞ்சமாய், ஆண்களிடம் 
சரியாக பேசாத இவள், இவனை கொஞ்சுகிற அளவுக்கு கவரபட்டாள்.
நட்பு காதலானது...
கவிதைகளே படித்திறாத பிருந்தாவை, 
இவன் கவிதைகளின் ரசிகையாக்கிவிட்டான்.
"குட்டிபாப்பா, செல்லம், புஜ்ஜிகுட்டி, மை பஸ்ட் பேபி,குட்டிம்மா"
இவைகள் இவர்களின் உரையாடலில் அதிகம் இடம்பெறும் வார்த்தைகள். 
தினமும் அவளை இவனோ, இவனை அவளோ நிறைகளை சொல்லி பாராட்டி, 
தான் எவ்வளவு நேசிக்கிறேன் என சொல்லி, 
கொஞ்சி கொஞ்சி தூங்கவைப்பர்.
ஒருநாள் இந்த சம்ரதாயங்கள் அரங்கேறாவிடினும் 
உறக்கமில்லா இரவுகளில் ஒன்று கூடும்.
ன் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத 
ஏக்கத்தோடு இருந்த இவனுக்கு, ஆனந்த விகடன் மூலம் 
அறிமுகப்பட்டது ட்விட்டர்
ட்விட்டரில் இவன் எழுத ஆரம்பித்து 15 நாட்களிலேயே 
அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக அங்கீகாரம் கிடைக்கபெற்றது. 
தூக்கிவிடும் நற்குணமுடையோர் நிறைந்த தளம் என்பதால் பயணம் வெற்றிபயணமானது.தொடர்பவர்கள் தரும் ஊக்கம் எந்நேரமும் 
ட்விட்டர் விட்டு வெளிவரா அடிமை ஆக்கியது. 
கனவு  மெய்ப்ப்படும்விதமாய் வலையும் பாய்ந்துவிட்டான்
(ஆனந்த விகடனில் வலைபாயுதே பகுதியில் இடம்பெற்றான்). 
விடுதலை விரும்பா அடிமை ஆகி போனான் த்விட்டருக்கு...
அலைபேசியில் அழைப்புகள் வந்தாலும் 
துண்டித்துவிட்டு த்விட்டரிலேயே ஊறி கிடப்பான்.
படித்துக்கொண்டிருக்கும் போதும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 
உள்ளே எட்டிபார்த்துகொண்டே இருப்பான் ட்விட்டரை.
இதை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முற்பட்டான்... 
அவள் உதிர்த்த கடைசி வார்த்தைகள் 
"சமூகவலைத்தளம், நம்மை சேர்த்து வைத்து, 
இன்று பிரித்தும் வைத்துவிட்டது...." 


Thursday, 22 September 2011

நடைபாதைவாசிகள்

இந்த பதிவு சென்னையில் நடைபாதையில் வசிக்கும் 
மக்களின் வாழ்க்கை பற்றியது....
என் மனதை வெகுவாக பாதித்த 
அவர்களின் வாழ்க்கை முறையை 
என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன்.


வாகனபுகையும், தூசியும்,
அட்சதை தூவ அரங்கேறும் சமையல்
எங்கள் உணவு
எப்போதும் சோறு
கட்சிகூட்டம் என்றால் கிட்டும் பிரியானி;

தேர்தல்பிரச்சார நாட்களில்
வேட்பாளர்களை விட நாங்கள் பரபரப்பாய்
இருப்போம்-தினம் ஒரு பொதுக்கூட்டம்

கடல்போல் தான் நாங்களும்
கழிவை வெளியேற்ற கடற்கரையை நாடுவோம்...

மழை பெய்தால் மற்றவர்கள் துக்கம் துடைக்கப்படும் 
எங்கள் தூக்கம் துறக்கப்படும்

போர்வைஇன்றி படுத்தால்
இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... 
போர்வைக்குள் புதைந்தவுடன் 
வியர்வை அபிஷேகத்திலும்
விரைவாய் விழிவந்தடையும் உறக்கம்

போர்வை மூடியபடி,
திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...

உடல் ஒவ்வாமையிலும் 
படுக்கை காணாது எங்கள் பகல்...

இருளை பாதுகாவலன் ஆக்கி
பார்வையாளர்கள் உறங்கிய பின்
நடுநிசியில் உடல் நனைப்பது தான்
'எங்கள் குளியல்'  

எங்கள் குடும்பமும் பல்கலைகழகம் தான்
திறந்தவெளி பல்கலைகழகம்...

அனைவரும் நோக்கும்படி தான் 
எங்கள் வாழ்வே, 
எவரும் உற்று நோக்குவதுதில்லை
எங்கள் வாழ்வை...    

Saturday, 3 September 2011

தங்கையின் கடிதம்

அக்கறை காட்டுவதால்,
அறிவுரை நீட்டுவதால்,
நலம் நாடுவதால்,
நல்வழி நடத்துவதால்,
நீ இன்னொரு தந்தை...

"புரிதலில் புலமை,
ஆளுமை திறனுள்ள ஆறுதல்,
அனைத்தையும்
நேர்த்தியாக பகிர்ந்து கொள்ளும் நேர்மை",
இவைகளால்
நீ என் 'நண்பன்'...

'வார்த்தைகளில் வழியும் வாஞ்சை,
திட்டும் போதும் சொட்டும் நேசம்,
கோபத்திலும் கொடுஞ்சொற்கள் வாரா நிதானம்',
இவற்றையெல்லாம் நான் கண்டது
உன்னில் மட்டும் தான்...

'உன் அனுபவம்'
எனக்கு பக்குவம் பயிற்றுவிக்கும் 'பாடம்',
'என் ஆசைகள்'
நீ நிறைவேற்ற துடிக்கும் 'நேர்த்திக்கடன்'...

அண்ணா!
நீ எந்தன்
இரண்டாம் தந்தை,
முதல் நண்பன்...