Sunday 17 June 2018

அப்பாவின் அன்பு


அப்பாவை கோபக்காரராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவருக்கு என் மீதிருக்கும் பாசத்தை உணர வைக்கும் தருணம் பதினொன்றாம் வகுப்பு படிக்கிற போது தான், வாய்க்கப்பெற்றது.
பள்ளிக்கூடத்திற்கு மிதிவண்டியில் சென்ற நான், அன்று இயல்பில் ஏற்பட்ட சிறிய தாமதத்தால், வீரன் உண்டியலில் இறங்கி சாமி கும்பிடுவதைத் தவிர்த்தவனாய் வேகமாக செல்லலானேன். ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மிதிவண்டியை நிறுத்த, இறங்க முனைகையில் மிதியடியில் சிறிய நழுவல் ஏற்பட்டு, தடுமாறுகையில் மிதியடி காலின் கட்டைவிரல் நகத்தை பெயர்த்துவிட்டது. இரத்தம் கசிய ஆரம்பித்து வலியும் ஏற்பட, அன்று பள்ளிக்கு விடுப்பெடுக்க, காரணம் கிடைத்துவிட்டது.

'பவானி ஆடையகம்' சென்று இராஜசேகரன் அண்ணனை, வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து தகவலைச் சொல்லி அப்பாவை வர சொல்ல, கேட்டுக்கொண்டேன். அப்பா வருவதற்கு முன்பே, அண்ணன் என்னை இராஜசேகர் மருத்துவரிடம் அழைத்து சென்று, முதலுதவி பெற செய்தார். இராஜசேகர் ஐயா மருந்துகளை பூசி, ஊசியும் போட்டுவிட்டார். சில மருந்துகளையும் கொடுத்து, தினமும் கட்டைப் பிரித்து மருந்துகளை இட்டுக் கொள்ள சொன்னார். "திரும்ப சிகிச்சைக்கு வர வேண்டுமா" என அப்பாவியாகக் கேட்ட என்னிடம், "நெகம் பேந்ததுக்கு நாப்பது தடவை வரனுமா?" என்று சிரித்தபடியே டாக்டர் வழியனுப்பினார். அப்பா வந்ததும், பள்ளி செல்வதிலிருந்து 'ஒருநாள் விடுதலை' கிடைத்த மகிழ்ச்சியில், வீடு திரும்பினேன்.

வீடு வந்து சேர்ந்ததும், பூவெடுத்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு சின்னம்மா, பெரிய விபத்துக்குள்ளானவனைக் காணும் வேகத்தோடு வந்த போது தான் தெரிந்தது, தொலைபேசியில் எனக்கு அடிபட்ட தகவல் கேட்டவுடன், அப்பாவின் மிதிவண்டி பஞ்சராகி கிடந்தபடியால், அப்பா அழுதுகொண்டே, பக்கத்துவீட்டு மிதிவண்டியை கேட்க சென்றிருக்கிறார். அப்பா அழுதுகொண்டே வந்த கோலம் கண்டு, எனக்கு பெரிய விபத்து நடந்துவிட்டதாக, அக்கம்பக்கத்தினர் நினைத்திருக்கின்றனர். இவ்வளவிற்கும் இராஜசேகரன் அண்ணன் 'நெகத்தில் சிறிய அடி தான், மெதுவா வாங்க" என்று தான், தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.
அப்பாவிற்கு என்னை அவ்வளவு பிடிக்குமா என்று துவங்கிய சிந்தனை, இதை எப்படி இவ்வளவு நாட்களாக உணராமலே இருந்திருக்கிறோம் என்று தொடர்ந்தது. 

எனக்கேற்படும் சிறு சிராய்ப்பு கூட, அப்பாவின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்துமளவு, அவரென்னை நேசிப்பதை, முதன்முறையாக புரிந்துகொண்டேன். அதன்பிறகு, அப்பாவை நான் பார்க்கும் கோணமே, மாறிப்போனது.

அடுத்து, பொறியியற் கல்லூரியின் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது, விடுதியில் சிறிய ராக்கிங் பிரச்சனையில் எனது பெயரும் மாட்டிக்கொண்டது. 4 பேர்களின் பெற்றோரும் வந்து, கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மற்றவர்களும் பெற்றோரை அழைத்துவர இசைவு தந்துவிட, எனக்கும் வேறுவழியில்லாமல் போயிற்று. விளையாட்டாக செய்தது சிக்கலில் போய் முடிந்துவிட்டதாக எடுத்துக்கூறி, அப்பாவை வர சொன்னேன். இரவுநேர பயணமாக 10 மணிநேரம் பயணித்து, காஞ்சிபுரம் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். நான் மட்டும் தான் அப்பாவோடு வந்திருந்தேன், மற்ற இருவரும் சித்தப்பா மாமா என்று சென்னையிலிருந்த உறவினரை அழைத்து வந்திருந்தனர். இன்னுமொரு நண்பன், எவரையும் அழைத்து வரவில்லை.

3 பேரும் தத்தமது குடும்ப பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, கல்லூரி முதல்வரைக் காணப் போனோம். சிறிதுநேர காத்திருப்பின்போது, விடுதியிலிருந்து வெளியேற ஆணையிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். எனது தந்தையும், அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்தார். கல்லூரி முதல்வர் அழைத்ததும், அவரது அலுவலகத்தில் நுழைந்தோம். 

குடும்ப பிரதிநிதிகளை அமர சொல்லி, கல்லூரி முதல்வர் பேச ஆரம்பித்தார்.
"வாரத்துல ரெண்டு நாளு வாழப்பழம் போடுறோம் சார், நல்ல சாப்பாடு போடுறோம், என்ன கொற இவங்களுக்குங்குறேன்" என்று முதல்வர் பேசிய போது, "இந்த வாழப்பழம் போடுற வசனத்த விடமாட்டானே இவன்" என்று எனக்கு எண்ணம் தோன்றியதால் வந்த சிரிப்பை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
மேலும் தொடர்ந்தார், "ஹாஸ்டல்லயே சாராயம் குடிக்கிறானுவ சார்" என்று முதல்வர் சொன்னதும் நானும் எனது அப்பாவும் ஒரே நேரத்தில் குறுக்கிட்டோம்.

"அதெல்லாம் இல்ல சார், வேணும்னா blood test பண்ணி பாத்துக்கோங்க" என்றேன் நான், testலாம் பண்ணமாட்டாங்க என்ற தைரியத்தில்.

"அப்படில்லாம் பண்ணமாட்டாங்க சார், தங்கமான பசங்க" என்றார் அப்பா.

"உங்க பசங்கன்னு சொல்லல, பொதுவா சொல்றேன்" என்றார் முதல்வர்.
"ராக்கிங் புகார், ஒண்ணும் பண்ண முடியாது. விடுதியை விட்டு நிரந்தரமா வெளியனுப்புறோம். வெளிய எங்கயாவது தங்கிக்க சொல்லுங்க, இந்தாப்பா எல்லார் போட்டோவையும் நோட்டீஸ் போர்டுல ஒட்டி circular போட்டு விட்டுறு" என்றார் முதல்வர்.

நண்பனின் சித்தப்பா "நோட்டீஸ் போர்டுல போட்டோ போடுறதெல்லாம் பெரிய punishment சார்" என்றார். நான் அவரைப் பார்த்து முறைத்ததை கவனித்து அமைதியானார். தண்டனையே வேண்டாம் என்று பேசாமல், புகைப்படம் பற்றி பேசியது, எனக்கு பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டார்.

எனது அப்பாவோ "ஹாஸ்டல்லேந்துலாம் அனுப்பிடாதிங்க சார், பசங்க படிப்பை பாதிக்கும்" என்று கும்பிட்டபடி கெஞ்சினார். பேசும்போதே அப்பாவிற்கு கண்கள் கலங்கிற்று, எனக்கும் கண்ணீர் முட்டியது. சிரமப்பட்டு செலவு செய்து படிக்க வைக்கும் அப்பாவை, இப்படி கண்டவனிடமெல்லாம் கெஞ்ச வைத்துவிட்டோமே என்று நினைத்தபோது, கட்டுக்கடங்காமல் எனக்கு கண்ணீர் பொங்கி வடிந்தது.

விடுதியிலேர்ந்து அனுப்பினாலும் வெளியில் தங்கி படிக்கலாம், இதற்காக கெஞ்சி வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அப்பா ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பாவின் மீது ஆத்திரம் கொள்வதா, எனது திமிரை எண்ணி வருந்துவதா என்ற இரண்டு உணர்வுகளுக்குமிடையே, ஊசலாடி தவித்தது, எனது உள்மனம்.

மெத்தப் படித்த அதிகார வர்க்கத்தின் மீது அப்பாவிற்கு இருந்த இயல்பான இடைவெளி, எனது படிக்கும் சூழல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையுணர்வு, இந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு எனது எதிர்கால கல்வியில் எதுவும் வினையாற்றுவார்களோ என்ற பயம், இவையெல்லாம் அப்பாவை அழ வைத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், எனது கல்வியின் மீதும் எனது எதிர்காலத்தின் மீதும், எந்தளவிற்கு கவனத்தோடும் அக்கறையோடும் அப்பா இருக்கிறார் என்பதைத் தான், அவரது கண்ணீர் துளிகள் உணர்த்தின.

கல்லூரி முதல்வரின் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், நண்பனின் சித்தப்பாவை கடிந்து கொண்டேன். அப்பாவிடம் பேச என்னிடம் வார்த்தைகளில்லை. சிறிதுநேர மௌனத்திற்குப் பின், "வெளியில தங்குறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா. கூட படிக்கிறவங்க தங்கிருக்காங்க, அவங்க கூட தங்கிப்பேன்" என ஏதேதோ ஆறுதல் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
அப்போது, 'இது போன்ற தவறுகளை இனி தவிர்க்க வேண்டும்' என்று முடிவெடுப்பதற்கு பதிலாக, 'இனி என்ன பிரச்சனையானாலும் அப்பாவை வர சொல்லக் கூடாது' என்று முடிவெடுத்தேன். 

அதற்கு பின்னான நாட்களில், இது போன்ற பிரச்சனைகளைக் கையாள, காஞ்சிபுரத்திலேயே சித்தப்பாக்களையும், அண்ணன்களையும், மாமாக்களையும் ஏற்பாடு செய்து கொண்டோம் என்பது கிளைக்கதை.

அப்பாக்கள் மகனுக்காக சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும், காவேரியின் 10 டிஎம்சி நீருக்கு சமம்.

படிக்கின்ற காலங்களில், எவ்வளவு பணம் கேட்டாலும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல், "சரிப்பா அனுப்பிடுறேன்" என்ற வார்த்தைகள் தான் வரும். அதனால் தான், நான் சம்பாதித்து கொடுக்கும் போதும் அதே மாண்பை கடைபிடிக்க விழைகிறேன், மனைவி விடுவாளா? அவளுக்கு கணக்கு சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.

எனக்கு பெண்பார்க்கும் படலம் நீண்டு கொண்டே போன போது, 27வயதிலேயே திருமணம் செய்துகொள்ள விரும்பாதவனாக, வெளிநாடு போய் சம்பாதித்துவிட்டு வருகிறேன் என்று அப்பாவிடம் கேட்டால், "ஏம்பா? உன் மனசுல யாரையும் நெனச்சிருக்கியா?" என்றார். இல்லையென்று மறுத்தால், "வேற சாதியா இருந்தாலும் பரவால்ல சொல்லு" என்றார். அப்போது தான் தோன்றியது "ச்ச இப்படியொரு வாய்ப்பு இருந்துருக்கே, யாரையாவது காதலிச்சுருக்கலாமோ"  என்று, "நாமளா காதலிக்கல, நம்மள தான எவளும் காதலிக்கல" என்பது வேறு சுள்ளென்று உரைத்தது.

ஒரு அப்பாவாக நீங்கள் எனக்கு செய்தவற்றில் 10ல் ஒரு மடங்கை, நான் எனது மகனுக்கு செய்துவிட்டாலே, எனது மகன் வாழ்நாளெல்லாம் என்னைப் போற்றுவான்.

நிறைவோடும் நெகிழ்வோடும் மகிழ்வோடும் மனதார உன்னை நேசிக்கிறேன் அப்பா! ஆயுள் முழுதும் உங்கள் அன்பை ஆராதிப்பேன்!

#LoveYouAppa
#FathersDay2018

No comments:

Post a Comment

படிச்சிட்டிங்களா? என்ன சொல்ல தோனுது? இங்கே இடுங்களேன்... நீங்கள் தரும் பின்னூட்டம், தவறிருப்பின் திருத்திகொள்ளவும், நிறைகளை இன்னும் மேம்படுத்திகொள்ளவும் உதவும். இதனை படிக்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதை என்னுடன் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டுகொள்கிறேன்...