Thursday 28 June 2018

தணலாக வேகுறேன்டி


"கருப்பம்பொலத்துல பத்திரிக்கை கொடுக்க போன எடத்துல, உன்ன ஒரு பொண்ணு விசாரிச்சுது அத்தான்" வீட்டுக்குள் நுழைந்த பொழிலனிடம், பாண்டியன் வியந்து கூறினான்.
"யாரு அத்தான்? பேரு என்ன?" என்றான் பொழிலன்.
"பேரென்னமோ சொல்லுச்சே... ம்ம்ம்... பேரு... மறந்துருச்சு அத்தான்!" என சிந்திப்பிலிருந்து விடுபடாதவனாய் பதிலளித்தான், பாண்டியன். மீண்டும் எதோ உடனடியாக நினைவுக்கு எட்டிய விதமாய் "வாத்தியார் வீட்டுப் பொண்ணுத்தான்! உன்னோட, நாடிமுத்து பள்ளிக்கூடத்துல படிச்சுதாமே" என்றான்.
"வாத்தியார் வீட்டுப் பொண்ணா? அதுசரி. நீ என் சொந்தக்காரன்னு, அதுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டான் பொழிலன், வியப்பு விலகாதவனாக.
"அதான... பத்திரிக்கையில பேரு வெலசாமெல்லாம் எழுதிருந்தில்ல! உன் கையெழுத்த வைச்சே கண்டுபிடிச்சுருச்சு அத்தான். ஊர் பேர பாத்துட்டு 'பொழிலன் வீட்டுப் பக்கமா?'னு கேட்டுச்சு. ஆமான்னதும், என்ன மொற? என்னயேதுன்னு விசாரிச்சுது. பத்திரிக்கைல இருந்த கையெழுத்த வச்சுதான் கேட்டதாவும், சொல்லுச்சு. கையெழுத்தை வச்சே கண்டுபுடிக்குதுன்னா, அஞ்சாவதுலயே ஆரம்பிச்சிட்டியாத்தான், உன் வேலைய? அப்பவே லவ் லெட்டர் கொடுத்துட்டியா?" என குறும்பு சிரிப்போடு கேட்டான், பாண்டியன்.
சிறிய வெட்கத்துடன், "அதெல்லாம் ஒண்ணுல்லத்தான், நீ வேற. கூட படிச்சதுக்கு, என் கையெழுத்து எப்படிருக்கும்னு தெரியாதா? என் எழுத்து வேற குண்டுகுண்டா தனியா தெரியுமுல்ல. அதனால ஞாபகம் இருந்துருக்கும்." என்று சமாளித்தான், பொழிலன்.

கையெழுத்தை வைத்தே என்னை நினைவில் நிறுத்தியிருப்பவள், நிறைமதியைத் தவிர வேறு எவளாக இருக்க முடியும்? கூடுதல் தகவலாக, கருப்பம்புலம் - ஆசிரியரின் மகள் என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கிறது. பெயர் வேறு வேண்டுமா? நிறைமதியே தான்.
"என் நிம்மதியைக் கெடுத்த நிறைமதியே!
நமது நெருக்கம் வளர்பிறையாவதால்
எனது உறக்கம் தேய்பிறையாகிறதடி...
" என்று அவளது நினைவில் எப்போதோ எழுதிய கவிதையோடு அவளது நினைவும், பொழிலனின் நினைவில் ஒலிபரப்பானது.
நிறைமதி, ஏழாம் வகுப்பு வரை பொழிலனோடு படித்து, பின்னர் 'பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு' மாறிப் போனவள்.
ள்ளிநாட்களில், உயரமாக இருப்பதால் நிறைமதி கடைசிப் பலகையில் அமர்ந்திருப்பாள், அவளைக் காண ஏதுவான, பக்கவாட்டில் போடப்பட்ட பலகையில் பொழிலன் அமருவது வழக்கம். நான்காம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை வகுப்பறைகள் மாறினாலும் இந்த வழக்கம் மாறுவது இல்லை. அவளது முகத்தைப் பார்த்தால், பொழிலனின் மனதில் ஒரு பேரானந்தம் பரவும். அவ்வளவு தான். அந்த உணர்வை நிறைமதியின் முகம் தவிர வேறெந்த முகமும் ஏற்படுத்தாதது, அவளின் மீதான ஈர்ப்பை குறையவிடாமல் காத்துவந்தது. பள்ளியில் வகுப்பு நடைபெறுகையில், சீரான கால இடைவெளியில் நிறைமதியின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொள்வான். சிலமுறை, இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும். பார்வைகள் சந்திக்கிற வேளைகளில், இவனாக விலக்கிக் கொள்ளாதவரை, அவளது அரைவட்ட பிறை போன்ற விழிகள் இவனை விழுங்க முற்படுவது போல பார்த்துக்கொண்டே தான் இருக்கும்.
அந்த பருவத்தில், எல்லா தேர்வுகளிலும், பொழிலனின் அருகே நிறைமதி அமர்ந்து கொள்வாள். பொழிலன் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதால், தேர்வெழுதும் போது அவனை தேர்வுத்தாளின் பதில்களை காட்டும்படி கேட்பாள். இவனும் தன்னால் இயன்ற வரை, ஆசிரியர் காணாத நேரங்களில் பதில்களை, அவளுக்கு தெரியும்படி காட்டி உதவுவான். இப்படியாக தேர்வெழுதி மூன்றாவது நான்காவது இடங்களை பெறும்வகையில், நிறைமதி மதிப்பெண்கள் எடுப்பாள். தேர்ச்சி பெறுவதையும் தாண்டி, தன்னை உயர் மதிப்பெண்களை குவித்துவிட உதவிய பொழிலனின் கையெழுத்து, எப்படி மறக்கும் நிறைமதிக்கு? 

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், பொழிலன் பத்தாம் வகுப்பு முடித்துக் கோடை விடுமுறையில் இருந்த போது, உள்ளூர் திருவிழாவின் பொருட்டு உறவினர் வீடுகளுக்கு கொடுக்கப்படும் இனிப்புவகைகளை, கருப்பம்புலம் அத்தைவீட்டிற்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வர சொன்னார், அவனது தந்தை. பொழிலன் மறுத்ததும், தான் கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவதாகவும், அவருக்கு பதிலாக புகையிலை காய போடுவதில் உதவி செய்யவும், கேட்டுக் கொண்டார். புகையிலை காய போடுவதும், சிறிதுநேரம் காய்ந்த பின்னர் எடுத்து அடுக்குவதும், எளிதான வேலை அல்ல. அதை செய்தால், இடுப்பு ஒடிந்துவிடுவது போன்ற வலி ஏற்படும், அத்தோடில்லாமல் புகையிலை தண்டின் பசை போன்ற பாய்மம் கையில் ஒட்டிக்கொண்டுவிட்டு சோப்பு போட்டு கழுவினாலும் விடுபடாது. அதன் கசப்புத்தன்மை, சாப்பிடும்போது திகட்டுகிற உணர்வை ஏற்படுத்தும். சாப்பாட்டோடு கலந்த கையிலிருக்கும் அழுக்கு, செரிமானத்தை கெடுக்கும், பசி உணர்வை தடை செய்யும். புகையிலை காய போடும் போது அதன் நெடி, சுவாசத்தில் கலந்து மெல்லியதான மயக்க உணர்வு ஏற்படுத்தும். இவ்வளவு கடினங்கள் நிறைந்த வேலைக்கு மாற்றாக, வேறெந்த வேலை கொடுத்தாலும் பொழிலன் செய்துவிடுவான் என்பது தெரிந்தே தான், அவனது தந்தை இப்படியான இரு தேர்வுகளை முன்வைத்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அத்தைவீடு சென்றுவர பொழிலன் அணியமானான்.

அந்த மாலைப்பொழுதில் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு, திருவிழா இனிப்புகளை அத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு வரும் வழியில், சாலையோரமிருந்த புகையிலை திடலின் உள்ளேயிருந்த மோட்டார் செட் நோக்கி நளினத்தோடு ஒரு உருவம் நகர்ந்ததை கவனித்தான். ஆண்களின் பனியனோடு பாவாடையை இணைத்தது போன்ற ஒரு உள்ளாடையை 'ஜிம்மிஸ்' என்பார்கள், அந்த ஜிம்மிஸ் அணிந்த நங்கையொருவள் தனது கொண்டையை இறுக்கி முடிந்துகொண்டே, குளிப்பதற்காக நடந்து செல்வதை உற்று கவனித்தபடி, அவன் மிதிவண்டியை மெதுவாக மிதித்து சென்றான். அவளது அக்குளில் அரும்பியிருந்த முடிகள், இவனது நரம்பு மண்டலத்தின் சில செயல்படாத சுரப்பிகளையெல்லாம் தூண்டிவிட்டன. எவரோ தம்மை பார்ப்பதை உணர்ந்த அந்த பெண், மெதுவாக திரும்பி பார்த்தாள். அவளது கருவிழிகள் அரைவட்ட நிலையை அடைந்தது. அரைவட்ட பிறையான கண்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து பார்த்து பேரானந்தமடைந்த நீள்வட்டமான முகம், சில பொலிவூட்டும் கூறுகளையும் உள்ளடக்கிய, பள்ளித்தோழி நிறைமதி. இப்போது மிதிவண்டியை மிதிப்பதை நிறுத்திக்கொண்டன, அவனது கால்கள். மிதிவண்டி, மெல்ல உருண்டு நகர்ந்தது.

நிறைமதி, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டு வந்து, நிதானமாக பொழிலனை பார்த்தாள். பொழிலனின் முகத்தில் தெரிந்த மாற்றங்கள், அவளை ஆச்சர்யப்படுத்தியதாக தெரியவில்லை. பள்ளி சென்றுவரும் போது, பொழிலனை தொடர்ந்து அவள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளின் பார்வை உணர்த்தியது. அதனையெல்லாம் ஆராயாமல், இவனது பார்வை துரிதமாக வேறெங்கோ போயிற்று... அவளது உள்ளாடையை துளையிட முயன்ற, முளைத்தும் முளையாத முன்மலர்களை ரசிக்க தொடங்கினான். மிதிவண்டியின் நகர்வில் காட்சி மெல்ல அகன்றது. அதே திசையில் அதே கோணத்திலிருந்த இவனது தலை, திரும்பி சாலையை கவனிப்பதையே மறந்து, உறைந்த நிலையை அடைந்திருந்தது.
உருண்டுகொண்டே சென்ற மிதிவண்டி, சாலையோரத்தில் அடிக்குழாயிற்காக கட்டப்பட்டிருந்த கட்டாயத்தில் மெல்லியதாய் மோதியது. நிலைதடுமாறி, மணலில் விழுந்தான். எவரும் பார்த்துவிடவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு எழுந்தான். அடியேதும் படவில்லை, அடிபட்டாலும் அதனை உணரும் நிலையில் அவனது மனம் இல்லை. ஒரு விபத்து நடந்துவிட்டால், அதிலிருந்து மீண்டெழுந்து திரும்ப வண்டியை இயக்குவதற்கு சற்று நேரம் எடுக்கும், அது போன்ற நிலையிலிருந்தான் அவன், அதனால் மிதிவண்டியை மிதித்து இயக்காமல், நடந்தே தள்ளிக் கொண்டு சென்றான்.

தம்மைப் பார்த்ததும், அவளுக்கு ஏன் எந்தவித வியப்பும் ஏற்படவில்லை? மாநிறமா தானே இருந்தாள், இப்ப கொஞ்சம் பளபளப்பு கூடின மாதிரி இருக்கே! தாம் பார்ப்பது தெரிந்தும் தனது கொங்கைகளை, அவள் ஏன் மறைக்க முற்படவில்லை? தன்னை வேற்றுமனிதனாக நினைக்காதது தான், காரணமா? அதெல்லாம் இருக்கட்டும், பெண்களுக்கு கமுக்கட்டுலல்லாம் முடி இருக்குமா? என்ன உணர்வு இது, எதனால் இந்த உச்சம்தொட்ட உணர்வு? புகையிலை காய போட்டிருந்தால், விண்ணவன் அண்ணன் சொன்ன மாதிரி அதிகபட்சமா புற்றுநோய் தான் வந்திருக்கும், இதென்ன அதவிட ஓத்திரியமா இருக்கும் போலிருக்கு!? இது தான் நிறைமதி வீடா? நல்லவேளையா அவங்க அப்பா என்னை பாக்கல, பாத்துருந்தா பத்தாவது தேர்வில் எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டிருப்பார், அவளை விட தாம் குறைவான மதிப்பெண்ணாக இருந்தால் அவமானமா போயிருக்கும்! என்றெல்லாம் சிந்தித்தபடி மிதிவண்டியை தள்ளிக்கொண்டு நடந்தான்.

பதினொன்றாம் வகுப்பு, ஆயக்காரன்புலம்
'இரா.நடேசனார் மேல்நிலைப் பள்ளியில்' பொழிலன் சேர்ந்திருந்தான். வகுப்புகள் தொடங்கி, போய்வரும் வேளையில், நிறைமதியும் ஆயக்காரன்புலத்திலிருக்கும் 'பெண்கள் மேல்நிலைப் பள்ளி'யில் சேர்ந்திருப்பதை அறிந்துகொண்டான். அப்போது தான் அந்த பெண்கள் பள்ளி, உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டிருந்தது. இல்லையென்றால், நிறைமதி, பொழிலன் சேர்ந்திருந்த பள்ளியில் தான் சேர்ந்திருக்க வாய்ப்பதிகம். இருவரும் மீண்டும் சேர்ந்து படிப்பதை, இயற்கை விரும்பவில்லை. இருந்தாலும், பள்ளி செல்லும்போதும் வரும்போதும் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அவளும் மிதிவண்டியில் தான், பள்ளி சென்றுவந்தாள். இதற்கு முன்பும் இதே சூழல் இதே வாய்ப்பு இருந்தது, ஆனால் பொழிலனின் கண்கள் நிறைமதியை காணவேயில்லை. இப்பொழுது தான், பொழிலனின் கண்கள் விரும்பி தேடும் உருவமாக நிறைமதி இருக்கிறாள். பொழிலன் தனது நண்பர்களோடு மிதிவண்டியில் செல்லும்போது, நிறைமதியும் தோழிகளுமான பெண்கள் கூட்டத்தை, பலமுறை வேகமாக தாண்டி சென்றதுண்டு. அப்படி முந்துவதற்கு முன், பின்னாலிருந்தபடியே அந்த கூட்டத்தில் நிறைமதி இருக்கிறாள் என்பதை அந்த கூட்டத்தினூடே ஊடுருவி நோக்கி, அறிந்துகொள்வான் அவன். நிறுத்தியோ சேர்ந்து சென்றபடியோ பேச, நிறைமதியும் சரி பொழிலனும் சரி, தனியாக செல்வதில்லை. தனியாக சென்றாலும், பேசும் மனத்திடம் பொழிலனுக்கு இருந்தது இல்லை. அவளை கடந்து செல்லும்போது, ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி அவள் புன்முறுவல் பூப்பாள். சிலமுறை வழக்கமாக செல்லும் நண்பர்கள் கூட்டத்தோடு அவன் செல்லாமல் தாமதமாக சென்ற நாட்களில், அந்த கூட்டத்தில் பொழிலனை தேடுவது போல் அவள் பார்த்ததை, அவனது நண்பர்கள் அவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ந்த நிறைமதி தான், திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற அவனது மாமா மகனிடம், அவனைப் பற்றி உசாவல் செய்திருக்கிறாள்.
புளியங்குளத்திற்கு குளிக்க போவதற்காக விண்ணவன் அழைத்தார், பொழிலன் சோப்புபெட்டி மற்றும் துண்டு எடுத்துக்கொண்டு, அவரோடு நடந்தான்.
"சொல்லிருக்கேன்லண்ணே உங்ககிட்ட... கருப்பம்பொலத்து வாத்திரியாரூட்டு பொண்ணு... அது, பாண்டியன் அத்தான்கிட்ட என்னை பத்தி விசாரிச்சிதாம். பத்திரிக்கைல என் எழுத்தை வச்சே கண்டுபுடிச்சிருக்குதுண்ணே" என்று விண்ணவனிடம் பகிர்ந்து கொண்டான், பொழிலன்.
"அது பேரு கூட, நல்ல பேராச்சேடா... நிறைமதியா?" என்றார் அவர்.
"ஆமாண்ணே, அது தான்" என்றான் இவன்.
"காலேஜ்ல எதுவும் மாட்டலயா ஒனக்கு? இதையே புடிச்சி தொங்கிட்டிருக்க?"
"அது தானண்ணே என்னை விசாரிச்சிருக்கு. நானா போய் அங்க அலைஞ்சிட்ருக்கேன்."
"விசாரிக்க தான செஞ்சிது. என்னமோ கட்டிகிட்டா பொழிலனைத் தான் கட்டிக்குவேன்னு சொல்லிவிட்டுருக்கிற மாதிரி பேசுறே"
"என்ன தான் சொல்லுங்க, அதுக்கு என் மேல ஒரு இது இருக்குண்ணே. லவ் பண்ணாலும், ஈசியா கல்யாணம் பண்ணிக்கலாமுண்ணே. சாதி பிரச்சனை கூட இல்ல"
"ஓ... இப்பல்லாம் சாதி பாத்து தான் லவ்வே பண்றிங்களா? சிறப்புடா தம்பி"
"ஒரு பேச்சுக்கு சொன்னேண்ணே, ஒடனே அத புடிச்சிக்காதிங்க"
"பேச்சுக்கு கூட சொல்லாதடா... தமிழன், சாதி பாகுபாடு பாத்தவன் இல்லடா! எல்லாம் எடையில வந்தது. உலகத்துக்கே, வாழ்றது எப்படின்னு சொல்லிக்குடுத்த இனம்டா! இப்ப, இப்படி சீரழிஞ்சு கெடக்குது. தமிழனோட மரபுலயே முற்போக்கான சிந்தனைல்லாம் இருந்துருக்குடா பொழிலா! அதுனால தான் பெரியாரோட பேச்சு, இங்க எடுபட்டுச்சு. இதே மாதிரி, வடஇந்திய பக்கம் பேசியிருந்தா இந்த செல்வாக்கு இருந்துருக்குமாங்குறது டவுட்டு தான்டா! யாருக்குத் தெரியும், அடிச்சே கூட கொன்னுருப்பானுங்க! சிவவாக்கியர்னு ஒரு சித்தர்டா, 8ம் நூற்றாண்டுல வாழ்ந்தவராம். இந்த சாதி பாகுபாட்டைல்லாம் கிழிச்சு தொங்கவிட்ருக்கார், அப்ப கூட சாதிய கட்டமைப்பு இவ்ளோ வலுவோட இருந்ததா தெரியல, பாப்பான் பரப்புரைல இருந்துருக்கு. அப்பல்லாம் சொந்த நிலங்கள், எல்லாருக்கும் இருந்துருக்கு. பிற்கால சோழர் காலம் வரைக்கும், ஆதித்தமிழர்கள்கிட்ட கூட நிலம் இருந்துருக்கு. அப்ப பாப்பான் ஆதிக்கம் இருந்தாலும், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் இருந்துருக்கு. எல்லாம் அதுக்கப்புறம் நடந்த மாற்றம்டா! பேசினா, பேசிட்டே போலாம். படிக்கிற பய நீ, இப்படி பேசலாமா? பெருஞ்சித்திரனார் எழுதின புத்தகம், எங்கிட்ட எவ்ளோ இருக்கு? அதெல்லாம் படிடான்னா, எங்கிட்ட இருக்குற கவிதை புத்தகமா தேடி பாத்து எடுத்துட்டு போறே! உன் காலேஜ் இருக்குதே காஞ்சிபுரம், அண்ணா பொறந்த ஊருடா! நா.முத்துக்குமாருக்கும் அந்த ஊரு தான். அங்க நெறய இலக்கிய கூட்டங்கள்லாம் நடக்குமாம், போய் கலந்துக்கடா! காலேஜ்லயா இதெல்லாம் சொல்லிகுடுப்பாங்க? போயிப் பாரு, நெறய தேடித்தேடி படி! ரொம்ப அறுக்குறானேன்னு நெனக்காத! நீ அப்படி நெனைக்கமாட்டே, ஏன்னா 'அந்த புத்தகத்துல என்னருக்கு இதுல என்னருக்கென்னுல்லாம்' ஆர்வமா கேக்குறே... அதனால தான் உங்கிட்ட இவ்ளோ சொல்றேன். அதை உக்காந்து படிக்க தான் மாட்றே! நான் எடுத்துகொடுத்த புத்தகத்தைலாம் படிச்சிருந்தா, சாதிய பிடிப்போட நீ பேசுவியா? ஒருத்தரோட புத்தகத்தை படிக்குறது மூலமா, அவரு வாழ்ந்து பெற்ற அனுபவத்த நீ படிச்சே பெறலாம். அதெல்லாம் வுடு!
இதெல்லாம் லவ்வுன்னு நெனச்சிட்டிருக்கியா? இது வேறும் இனக்கவர்ச்சி, படம் பாத்து ரொம்ப கெட்டுபோயிருக்க! ஒருத்தியோட அழகு பாத்து வர்றது எப்படிடா லவ் ஆகும்? அப்ப நாளைக்கே அவளுக்கொரு விபத்தாயி அழகு போயிருச்சுன்னா, இப்ப அவளை புடிக்கிற மாதிரியே அப்பவும் புடிக்குமாடா? புடிக்கும்பே... அப்படி புடிக்காதுறா ஒனக்கு! அழகு இன்னைக்கிருக்கும் நாளைக்கு போயிரும், குணம் தான்டா நெலைக்கும். குணத்தைப் பாத்து காதலிக்குற பக்குவம் உனக்கின்னும் வரல. அந்த பக்குவம் வந்த பிறகு, பேசி பழகி புரிஞ்சுகிட்டு எவளையாவது புடிச்சிருந்தா சொல்லு, நியாயம்களாம். அந்த பொண்ணு பத்தி சொல்றப்பல்லாம், இத பல தடவை சொல்லிருக்கேன் உனக்கு. அப்பல்லாம் சும்மா சைட்டடிக்குறதுண்ணேம்ப, இப்ப லவ்வுங்குற" என்று விண்ணவன் சொல்லி முடிக்கும் போது, குளத்தை அடைந்திருந்தார்கள்.
பொழிலன், துண்டு கட்டிக்கொண்டு குளத்திலிறங்கி நீந்த ஆரம்பித்தான். மல்லாக்கப்படுத்தபடி தாண்டகம் அடித்துக் கொண்டு, விண்ணவன் சொன்னவற்றை அமைதியாக சிந்தித்து பார்த்தான். குழம்பிய நீருக்குள் மூழ்கியபடி நீந்தும் அவனின் மனதில், தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள் நீந்தின. அவனின் அமைதிக்கான பொருளை புரிந்துகொண்டவராக தனக்குள் சிரித்துக்கொண்டார், விண்ணவன். அந்த சிரிப்பின் நீட்சி உதட்டோரமும் சிறிதாக வெளிப்பட்டது.

வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட, பொழிலனால் சொந்த ஊருக்கு வர முடிவதில்லை. கடந்த நான்கு வருடங்களாகவே, ஊருக்கு போக வேண்டுமென்று தோன்றினால் மட்டுமே  போய்வருவது வழக்கமாகிவிட்டது. பண்டிகை காலங்களில் விடுப்பு கிடைப்பது கடினம், திருமணமானவர்கள் விடுப்பு எடுக்க முனைப்பு காட்டுவார்கள், தானும் அவர்களுக்கு ஒத்துழைத்து அவன் பண்டிகை காலங்களில் ஊருக்கு போய்வருவதை தவிர்த்துவிடுவான். இந்த வருடம் பொங்கலுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு நிறுவனத்திடம் மூன்றுநாள் விடுப்பு பெற்று, ஊருக்கு புறப்பட்டான். மூன்று மாதங்களுக்கு பிறகு ஊருக்கு செல்வது சிறியதாக ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. விடிகிற தருவாயில் தஞ்சாவூர் தாண்டி மன்னார்குடி போகும்வழி நெடுக பச்சைபசேலென்ற நெல்வயல்களை பார்த்துக் கொண்டு பயணிப்பது, புத்துயிர் பெருக செய்யும் அனுபவம். அதை பெறுவதற்கு ஏற்றபடி, தனது பயணத்தை திட்டமிடுவது அவனது வழக்கம். அந்த அனுபவங்களை ருசித்தபடியே பயணித்து, காலைவேளையில் திருத்துறைப்பூண்டி வந்து சேர்ந்தான்.
திருத்துறைப்பூண்டியிலிந்து வேதாரணியம் போக பெருங்கூட்டம் காத்திருந்தது. அரசாங்க பேருந்து ஒன்று வந்துசேர, அடித்துபிடித்து ஏறினார்கள், இவனுக்கு அமர்ந்து தான் பயணிக்க வேண்டுமென்ற தேவையில்லை ஆதலால், பொறுமையாக பேருந்து புறப்படும் முன் ஏறிக்கொண்டான். தனியார் பேருந்தாக இருந்தால், தஞ்சாவூரை தாண்டியதுமே இளையராஜாவின் இசை வழித்துணையாக வந்துவிடும். இது அரசாங்க பேருந்து என்பதால், அலைபேசியின் ஒலிப்பான்களை காதில் செருகிக்கொண்டான். "ஆத்தங்கரை மரமே அரசமர இலையே...ஆலமரக்கிளையே அதிலுறங்கும் கிளியே" இசையின் பின்புலத்தோடு, சாலையோர காட்சிகள் நகர துவங்கின.
தாணிக்கோட்டகத்தில் புதியதாக சில கடைகள் முளைத்திருந்தன, "கல்லொன்று தடை செய்தபோதும், புல்லொன்று புதுவேர்கள் போடும், நம்காதல் அதுபோல நீளும்." வாய்மேடு வந்தது, பெரும்கூட்டம் ஒன்று இறங்கிவிட அதைவிட பெரிய கூட்டம் ஏறத் தொடங்கியது, அந்த கூட்டத்தில் குட்டியானையளவில் அரேபியன் குதிரை உயரத்தோடு இருந்த பொம்புள, செருப்புக்காலோடு அவனது காலில் ஏறி மிதித்து நின்றார். இவனது காலில், அவரது செருப்பில் ஒட்டியிருந்த மண் நரநரவென அறைபட்டு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. "கால மிதிக்கிறிங்க..." என்று முனகியபடி அந்த பொம்புளயை தள்ளியதும், அவள் திரும்பினாள். அறைவட்ட பிறை போன்ற கண்கள்... நிறைமதியே தான், என்ன நிறை கொஞ்சம்(!) கூடிருச்சு!
நிறை கூடியதால், மிதி வலிச்சிருக்கு!
இனி அவள் 'நிறைமிதி'...
"நிலவில் பொருள்கள் எடை இழக்கும்... நீரிலும் பொருள் எடை இழக்கும்... காதலில் கூட எடை இழக்கும், இன்று கண்டேனடி அதை கண்டுகொண்டேனடி... காதல் தாய்மை ரெண்டு மட்டும் பாரமென்பதை....." எரிச்சலோடு ஒலிப்பானை காதிலிருந்து எடுத்துவிட்டான்.

பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது, விண்ணைப் பார்த்து விண்ணவனுக்கு நன்றி சொன்னான்.

6 comments:

  1. பொழிலன்களின் கடந்த காலங்களை கட்டுரையாக வெடித்தது சிறப்பு மிகசிறப்பு லவ் யூ

    ReplyDelete
  2. Replies
    1. இல்லை மாப்ள. இது வேற... இது கற்பனை மாப்ள.

      Delete
  3. அருமை .தூய தமிழில் ஒரு சிறந்த கதை .
    எது காதல் என்று பிரித்து காட்டிய விதம் , ஜாதி பாகுபாடின்றி வாழ்ந்தவன் தமிழன் என்ற கருத்தை உரக்க சொன்ன விதம் . நல்ல எதிர் காலம் இருக்கு உங்களுக்கு .

    ( புகையிலை காய போட்டிருந்தால், விண்ணவன் அண்ணன் சொன்ன மாதிரி அதிகபட்சமா புற்றுநோய் தான் வந்திருக்கும் ) காதல் வந்த புதிதில் அத விட கொடுமை யானா வலியை உணர நேரிடும் என்று சொன்ன விதம் . அருமை நண்பரே .. 99% உண்மை கதையாக இருக்குமோ ? நீங்கள் விண்ணவனா? பொழிலான ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. இரண்டு கதாப்பாத்திரங்களிலும் பாதி பாதி.

      Delete

படிச்சிட்டிங்களா? என்ன சொல்ல தோனுது? இங்கே இடுங்களேன்... நீங்கள் தரும் பின்னூட்டம், தவறிருப்பின் திருத்திகொள்ளவும், நிறைகளை இன்னும் மேம்படுத்திகொள்ளவும் உதவும். இதனை படிக்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதை என்னுடன் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டுகொள்கிறேன்...