Sunday, 4 July 2021

ஒரு ராஜாவின் பாடல்


ஒரு பாடல்

ஒரு இசை

காரணம் நாடிய மது

ஒரு தீண்டல்

ஒரு ஆழ்ந்த முத்தம்

ஒரு புலன்மகிழும் புணர்வு

இவையெல்லாம் என்ன செய்துவிடும்?

ஒரு பாடல்...

பணி செய்யும் இடத்தில் சம்பளம் சரிவர கிடைக்கப் பெறவில்லை. நான் எந்த பணிக்காக தேர்வு செய்ய பட்டேனோ, அதை விடுத்து வேறு பணிகளையும் செய்ய வற்புறுத்தப்பட்டேன். சிறுவயதிலிருந்தே அதிக உடலுழைப்பு செய்து பழக்கம் இல்லை. இந்த வேலையை விட்டு, இந்த நாட்டை விட்டு, ஏதேனும் ஒரு வழியில் தப்பி போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்து, அதை மனைவியிடம் சொன்ன போது, அவளது கனவு சிதையப் போவதை எண்ணி, மறுதலித்தாள். சில நாட்கள், பேசவே இல்லை. 


இருவருக்கும் இடையே, இந்த உணர்வு போர் நடந்து கொண்டிருந்த வேளையில், பல நாட்கள் உறக்கத்தை இழந்தேன். 

வலையோளியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்த போது, 

"என்னோட உலகம் வேறு , உன்னோட உலகம் வேறு... 

ரெண்டும் இங்கே

சுத்தி வருகுதடி....

நீ காணும் கனவு வேறு

நான் காணும் கனவு வேறு

ரெண்டுலேயும் தூக்கம் மறந்ததடி..."

இளையராஜாவின் குரலில்...

இந்த வரிகள் எனது சூழலுக்கு பொருத்திப் போனதாக உணர்ந்தேன். திரும்ப திரும்ப அதே பாடல் கேட்க கேட்க, மனதிலிருந்த காயத்திற்கு மயிலிறகால் மருந்திட்டது போலிருந்தது.

வேலையை விட்டு ஊருக்கு செல்லும் முடிவு, கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. 

பலநாட்கள், அதே குழப்பத்தில் மூழ்கி கிடக்க விரும்பாத மனம், அதிலிருந்து விடுவிப்பு பெற எண்ணி, முடிவை மாற்றிக் கொண்டு, "இந்த வேலையில் தொடர்ந்து, என்ன நடந்துவிடும் என்பதை பார்த்து விட்டால் என்ன?" என்ற எண்ணம் அலை போல் மோதியது.

இப்படி செய்து பார்த்து விடலாமா என்று எனது அன்பிற்குரியோர்களிடம் ஆலோசித்த போது, அவர்களும் அதுவே சரி என்றனர்.

அந்த நாட்கள், கடந்தன.

சில மாதங்களுக்கு பிறகு, சூழல் அதைவிடவும் மோசமானது, கொரானா காலத்தில்.

இன்னும் சில மாதங்கள் உருண்டன.

ஐயன் அருளில், நிலைமை தற்போது சரியாகி, மகிழ்வான சூழல் உருவானது.

வீடு கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவில், காலெடுத்து வைத்தாகிவிட்டது. இறையருளில், நிறைவேறும் நாளை நோக்கி ஆர்வத்தோடு ஓடுகின்றன, கால்கள்.


திரும்பி பார்த்தால், அந்த நினைவுகளோடு இந்த பாடலும் ஒலிக்கிறது.