Thursday, 22 September 2011

நடைபாதைவாசிகள்

இந்த பதிவு சென்னையில் நடைபாதையில் வசிக்கும் 
மக்களின் வாழ்க்கை பற்றியது....
என் மனதை வெகுவாக பாதித்த 
அவர்களின் வாழ்க்கை முறையை 
என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன்.


வாகனபுகையும், தூசியும்,
அட்சதை தூவ அரங்கேறும் சமையல்
எங்கள் உணவு
எப்போதும் சோறு
கட்சிகூட்டம் என்றால் கிட்டும் பிரியானி;

தேர்தல்பிரச்சார நாட்களில்
வேட்பாளர்களை விட நாங்கள் பரபரப்பாய்
இருப்போம்-தினம் ஒரு பொதுக்கூட்டம்

கடல்போல் தான் நாங்களும்
கழிவை வெளியேற்ற கடற்கரையை நாடுவோம்...

மழை பெய்தால் மற்றவர்கள் துக்கம் துடைக்கப்படும் 
எங்கள் தூக்கம் துறக்கப்படும்

போர்வைஇன்றி படுத்தால்
இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... 
போர்வைக்குள் புதைந்தவுடன் 
வியர்வை அபிஷேகத்திலும்
விரைவாய் விழிவந்தடையும் உறக்கம்

போர்வை மூடியபடி,
திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...

உடல் ஒவ்வாமையிலும் 
படுக்கை காணாது எங்கள் பகல்...

இருளை பாதுகாவலன் ஆக்கி
பார்வையாளர்கள் உறங்கிய பின்
நடுநிசியில் உடல் நனைப்பது தான்
'எங்கள் குளியல்'  

எங்கள் குடும்பமும் பல்கலைகழகம் தான்
திறந்தவெளி பல்கலைகழகம்...

அனைவரும் நோக்கும்படி தான் 
எங்கள் வாழ்வே, 
எவரும் உற்று நோக்குவதுதில்லை
எங்கள் வாழ்வை...    

Saturday, 3 September 2011

தங்கையின் கடிதம்

அக்கறை காட்டுவதால்,
அறிவுரை நீட்டுவதால்,
நலம் நாடுவதால்,
நல்வழி நடத்துவதால்,
நீ இன்னொரு தந்தை...

"புரிதலில் புலமை,
ஆளுமை திறனுள்ள ஆறுதல்,
அனைத்தையும்
நேர்த்தியாக பகிர்ந்து கொள்ளும் நேர்மை",
இவைகளால்
நீ என் 'நண்பன்'...

'வார்த்தைகளில் வழியும் வாஞ்சை,
திட்டும் போதும் சொட்டும் நேசம்,
கோபத்திலும் கொடுஞ்சொற்கள் வாரா நிதானம்',
இவற்றையெல்லாம் நான் கண்டது
உன்னில் மட்டும் தான்...

'உன் அனுபவம்'
எனக்கு பக்குவம் பயிற்றுவிக்கும் 'பாடம்',
'என் ஆசைகள்'
நீ நிறைவேற்ற துடிக்கும் 'நேர்த்திக்கடன்'...

அண்ணா!
நீ எந்தன்
இரண்டாம் தந்தை,
முதல் நண்பன்...